×

இந்தியா-ஜெர்மனி இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஏஞ்செலா மெர்கலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் இந்தியா-ஜெர்மனி அரசுக்கு இடை யேயான ஆலோசனை கூட்டம்  நடைபெற் றது. இதில், 5 கூட்டு அறிவிப்புகளும், விண்வெளி, விமானம், கடல் வழி தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்தி ஊக்கப்படுத்துதல், ஆயுர்வேதம், யோகா, தியானம் உள்ளிட்ட கல்விகளில் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய ஒப்பந்தங்களாகும்.

இதையடுத்து, பிரதமர் மோடி-மெர்கல் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘‘வரும் 2022ம் ஆண்டுக்குள், தொழில்நுட்ப நிபுணத்துவமும், பொருளாதார அதிகார மையமாகவும் திகழும் புதிய இந்தியாவை கட்டமைக்கும் முயற்சிக்கு ஜெர்மனி மிகுந்த பயனுள்ள நாடாகும். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கையாள்வதற்கு இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்,’’ என்றார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் பேசுகையில், ‘‘தற்போது செய்துள்ள ஒப்பந்தங்கள் மூலம், புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் இரு தரப்பு உறவு முன்னேறி வருவதை இந்தியாவும், ஜெர்மனியும் நிரூபித்துள்ளன.’’ என்றார்.

ராணுவ தளவாட மையத்தில் ஒத்துழைப்பு


இந்தியாவும் ஜெர்மனியும் எலக்ட்ரிக் வாகனம், ஸ்மார்ட் சிட்டி, நதிகளை தூய்மை செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சாத்தியத்தக்க ஒத்துழைப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தனது பேட்டியில் பிரதமர் மோடி கூறினார். மேலும், தமிழகம் மற்றும் உபி.யில் அமைய உள்ள ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை ஜெர்மனி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். இதே போல், மேக் இன் இந்தியா திட்டத்தை புகழ்ந்து பேசிய மெர்கல், அத்திட்டத்தில் ஜெர்மனியும் பங்கேற்கும் என அறிவித்தார்.

Tags : Signing ,Germany ,India , 17 agreements,India and Germany
× RELATED இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் :...