×

நவ.30 முதல் டிச.20 வரை 5 கட்டமாக நடக்கிறது ஜார்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிப்பு : டிச.23ல் வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அரியானாவில் பாஜ ஆட்சியை தக்க வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் தொங்கு பேரவை அமைந்ததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதியுடன் காலாவதியாகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட  இம்மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று அறிவித்தார். நக்சல் பாதிப்புள்ள மாநிலம் என்பதால் இங்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் 30ம் தேதி முதல் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், டிசம்பர் 7ம் தேதி 2ம் கட்டமாக 20 தொகுதிகளுக்கும், டிசம்பர் 12ம் தேதி 3ம் கட்டமாக 17 தொகுதிகளுக்கும், டிசம்பர் 16ம் தேதி 4ம் கட்டமாக 15 தொகுதிகளுக்கும், டிசம்பர் 20ம் தேதி கடைசி கட்டமாக 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தற்போது, இம்மாநிலத்தில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா, அரியானாவில் ஆளும் பாஜ.வுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் ஜார்கண்ட் தேர்தல் முடிவு, பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பாஜவை எதிர்த்து,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. மகாராஷ்டிரா, அரியானா போல, ஜார்கண்ட்டிலும் எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 5 ஆண்டு கால பாஜ ஆட்சியில் கும்பல் கொலை, வன்முறை சம்பவங்கள் அதிகளவில் ஜார்கண்டில் நடந்திருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அதே சமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக ரகுபர் தாஸ் தலைமையிலான அரசு, 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளது. இதனால், பாஜ மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தேவையான இடங்களை பிடிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றில் இருந்தே அம்மாநிலத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

மாற்றுத்திறனாளி, முதியோர் தபால் ஓட்டு போட அனுமதி

நாட்டில் முதல்முறையாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதி ஜார்கண்ட் தேர்தலில் செய்யப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 2.19 லட்சம் முதியோர்களும், 2.16 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதோடு, தபால் ஓட்டும் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சல் பாதிப்புள்ள மாநிலம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

Tags : Jharkhand ,state ,Election , Election date,Jharkhand state
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...