சென்னைக்கு சிகிச்சை பெற வந்தபோது நடுவானில் பறந்த விமானத்தில் தொழிலதிபர் மனைவி மரணம்

மீனம்பாக்கம்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் நவுஷத் நிஷார் (50), தொழிலதிபர். இவரது மனைவி நசுருதீன் நிஷா (43). இவருக்கு இதயநோய் பாதிப்பு ஏற்பட்டதால், மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால், குணமாகவில்லை. இதையடுத்து நவுஷத் நிஷார், தனது மனைவியை சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி,  நேற்று காலை 6 மணிக்கு சென்னைக்கு வரும் இண்டிகோ பயணிகள் விமானத்தில் நிஷாரும், மனைவி நிஷாவும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த விமானம் காலை 8.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க இருந்தது. இந்நிலையில், காலை 8 மணியளவில் சென்னை வான்வெளியை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது நிஷாவுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால்  விமானத்திற்குள்ளேயே வலியில் துடித்தார். இதுபற்றி விமானப் பணிப்பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விமானத்தில் பெண் பயணிக்கு அவசர சிகிச்சை தேவை.

எனவே, மருத்துவக் குழுவினரை சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தயாராக இருக்கும்படி கூறினார்.  அதோடு இந்த விமானம் சென்னையில் தரையிறங்க முன்னுரிமை தரவேண்டும் என்றும் தகவல் தரப்பட்டது. உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் தயாராக இருந்தன. விமானத்தை முதலில் தரையிறங்க முன் அனுமதியும் கொடுக்கப்பட்டது. அதன்படி காலை 8.35 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 27 நிமிடங்கள் முன்னதாக 8.18 மணிக்கே சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் விமானத்தில் ஏறி, அந்த பயணியை பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மருத்துவக் குழுவினர் கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். விமான நிலைய போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு சரக்கு விமானத்தில் நேற்று மாலை உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, பயணி ஒருவர் விமானத்தில் இறந்துவிட்டால் அதை முழுமையாக சுத்தம் செய்த பின்பே மீண்டும் பயணிகளை ஏற்றவேண்டும் என்பது விமானத்தின் விதி. அந்த விமானம் மீண்டும் 9.20 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்வது வழக்கம். விமானத்தில் பயணி இறந்ததையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு பெங்களூருக்கு காலை 11.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories:

>