புதிய தலைவர் நியமனம் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ் இயக்கம் : அமெரிக்காவுக்கு மிரட்டல்

பெய்ரூட்: ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை, அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த இயக்கத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பதுடன், ‘அமெரிக்காவை பழிக்கு பழி தீர்ப்போம்’ என மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படை கடந்த மாதம் 26ம் தேதி சுற்றிவளைத்தது. தப்பிக்க வழியில்லாத பாக்தாதி தனது மகன்களுடன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டான். இந்த அதிரடி ஆபரேஷனுக்கு ஆதாரமாக அமெரிக்கா சில புகைப்படங்களை வெளியிட்டது.

இந்நிலையில், பாக்தாதி இறந்து விட்டதை ஐஎஸ் அமைப்பு நேற்று உறுதி செய்தது. அந்த அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராகிம் அல் ஹசிமி அல் குரோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக குரல் பதிவு மூலம் ஐஎஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க சிறப்பு படையினர் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு ஹசன் அல் முகாஜிர் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு நேற்று முன்தினம் உறுதி செய்தது.
புதிய தலைவர் குரோஷி குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவர் அதிகம் அறியப்படாத தீவிரவாதி என ஐஎஸ் நடவடிக்கைகளை கவனித்து வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ஐஎஸ் வெளியிட்ட குரல் பதிவில் அமெரிக்காவுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ‘‘பாக்தாதிகொல்லப்பட்டதில் சந்தோஷப்பட வேண்டாம். இன்று ஐரோப்பாவிலும், மத்திய அமெரிக்காவிலும் மட்டுமின்றி இன்னும் பல இடங்களில் நாங்கள் காலூன்றி இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை’’ என மிரட்டப்பட்டுள்ளது. எனவே, பாக்தாதியின் மரணத்திற்காக அமெரிக்காவை பழிக்கு பழி வாங்க ஐஎஸ் அமைப்பு முயற்சிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Baghdadi ,killing ,US , appointment of new leader, Baghdadi's killing, IS movement, US threat
× RELATED கையெழுத்து இயக்கம் நிறைவு