×

கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு ‘லைசென்ஸ்’சுக்காக நிர்ணயித்த கல்வித்தகுதி நீக்கம்: இன்று முதல் அமல்

சேலம்: கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற நிர்ணயிக்கப்பட்ட 8ம்வகுப்பு கல்வி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன ஓட்டிகளுக்கு எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த அலுவலகங்களில் புதிய வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் காகித வடிவிலான ஆவணங்களாகவும், ஓட்டுநர் உரிமம் பிளாஸ்டிக் அட்டை வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை நவீனப்படுத்தி ‘சிப்’ பொருத்தப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் தற்போது வழங்கப்படுகிறது. மேலும், கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைனில் செலுத்தப்படுகிறது. மேலும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு அபாரதம் விதித்து வசூலித்து வருகின்றனர். இதனிடையே, சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், தற்பொழுது போக்குவரத்து வாகனங்களை இயக்க மத்திய மோட்டார் வாகன விதியில் உள்ள 8ம் வகுப்பு கல்வித் தகுதியினை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நீக்கம் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற கல்வி தகுதி தேவையில்லை என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : License, Education
× RELATED அஜித் பவாரின் மனைவி மீதான ரூ.25,000 கோடி வங்கி மோசடி வழக்கு மூடப்பட்டது