×

‘மகா’ புயல் விலகி சென்றதால் நெல்லை, தூத்துக்குடியில் மழை குறைந்தது

நெல்லை: ‘மகா’ புயல் விலகி சென்றதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. நவ.4ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ‘மகா’ புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டிய மழை, நேற்று மதியம் வரை நீடித்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் ‘கிடுகிடு’ வென உயர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 518 குளங்களில் ஆயிரத்து 221 பாசனகுளங்கள் உள்ளன. இவற்றில் 125க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. இவை தவிர பெரும்பாலான குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 1,297 மானாவாரி குளங்களில் ஒரு சில குளங்களில் மட்டும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதற்கிடையே மகா புயல் தமிழகத்தை விட்டு விலகி அரபிக் கடலில் லட்சத் தீவுகளை தாண்டி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. இருப்பினும் மலைப்பகுதிகளில் மிதமான மழை இருப்பதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறையவில்லை.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 125.70 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 129.40 என 3.70 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3543.98 அடி தண்ணீர் வரும் நிலையில் 275 கனஅடி வெளியேற்றப்படுகிறது. 140.78 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145.18 அடியாக அதிகரித்தது. 57.25 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.75 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1159 கனஅடி நீர் வருகிறது. வெளியேற்றம் இல்லை.
கடனா நதியின் நீர்மட்டம் 83.50 அடியிலிருந்து 84 அடியாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 354 கனஅடி நீர் வருகிறது. 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 82 அடியாக இருந்த ராமநதியின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 72.01 கனஅடி நீர் வரும் நிலையில், 30 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.21 அடியாக நீடிக்கும் நிலையில் அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் 87 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

2.75 அடியிலேயே இருந்த வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 6 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 65 கனஅடி நீர் வருகிறது. நம்பியாறு நீர்மட்டம் 14.92 அடியாக உள்ளது. 40 அடி இருந்த கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 212 கனஅடி நீர் வருகிறது. 50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 126 அடியாக இருந்த அடவிநயினார் நீர்மட்டம் 126.50 அடியானது. 35 கனஅடி நீர் வரும் நிலையில் 20 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: அம்பை- 0.60 மிமீ, சேரன்மகாதேவி-1, மணிமுத்தாறு-2.4, குண்டாறு-9, நம்பியாறு-3, அடவிநயினார்- 4, நாங்குநேரி-2.50, பாளையங்கோட்டை-1, ராதாபுரம்-7, தென்காசி 2.20, நெல்லை- 1, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு: திருச்செந்தூர் -16 மிமீ, காயல்பட்டினம்- 8, குலசேகரன்பட்டினம்- 3, விளாத்திகுளம்- 2.6, வைப்பார்- 2, கீழ அரசடி-2, சாத்தான்குளம்-6, ஸ்ரீவைகுண்டம்- 4, தூத்துக்குடி- 3.8. நவம்பர் 4ம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : rainfall ,storm ,Thoothukudi ,Maha ,maha storm , Rain, maha storm
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...