×

உலகெங்கிலும் 1,400 முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்அப் தகவலை திருடியது எப்படி?

புதுடெல்லி: உலகெங்கிலும் 20 நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்அப் தகவலை இஸ்ரேல் நிறுவனம் திருடியது அம்பலமாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரி உள்ளது. இஸ்ரேல் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் சுமார் 1,400 செல்போன்களில், சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது. அதாவது ‘பெகசஸ்’ என்ற மால்வேர் (உளவு சாப்ட்வேர்) மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளன. எப்படி இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என்றால், முதலில் போலியாக வாட்ஸ் அப் கணக்கு உருவாக்கப்படும். அதைத் தொடர்ந்து, ‌தாக்குதல் நடத்த வேண்டிய வாட்ஸ் அப் எண்ணுக்கு வீடியோ கால் அழைப்பு விடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பை ஏற்காவிட்டாலும், அவரது அலைபேசிக்கு ‘பெகசஸ்’ மால்வேர் சென்றுவிடும்.

இதையடுத்து ‘பெகசஸ்’ மால்வேர் மூலம் அலைபேசியின் மொத்த கட்டுப்பாடும், உளவு பார்ப்பவரின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அதாவது அந்த தொலைபேசியின் மூலம் அனுப்பப்படும் அனைத்து வாட்ஸ் அப் தகவல்களும், வாட்ஸ் அப் அழைப்புகளும், சாதாரணமாக பேசும் அழைப்புகளும் உளவு பார்ப்பவருக்கு கிடைத்துவிடும். மேலும், அனைத்துவிதமான பாஸ்வேர்டுகள், படங்கள், கேமரா மற்றும் மைக்ரோ போன் உள்ளிட்டவை உளவு பார்ப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ‘பெகசஸ்’ என்ற மால்வேரை சில அரசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த மால்வேரை தயாரித்துள்ள இஸ்ரேல் நிறுவனம், அதை சில நாட்டு அரசுகளின் உளவுத்துறைகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை குறி வைத்து, அவர்களின் வாட்ஸ் அப் எண்கள் மூலம் உளவுப்பார்க்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உலகின் வல்லரசு நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களில் குறைந்தது 20 நாடுகளில் வாட்ஸ் அப் மூலம் தகவல் திருட்டு நடந்துள்ளது. அமெரிக்க நட்பு நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன்,  மெக்ஸிகோ, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 29, 2019 மற்றும் மே 10, 2019க்கும் இடையில் குறைந்தது 1,400 பயனர்களின் செல்போன்களை ஹேக்கிங் செய்து, என்எஸ்ஓ குழுமம் மோசடி செய்துள்ளது. ஹேக் செய்யப்பட்ட மொத்த வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நாடுகள் வழக்கு தொடர்ந்தும், வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கமும் கோரியுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியர்களின் வாட்ஸ் அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்ட  விவகாரத்தில் பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்  அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பாஜ அரசின் செயல்பாடுகள் இருக்கிறது’’ என்றார்.

Tags : world , whatsapp
× RELATED உலக அளவில் பட்டினியால் வாடும்...