×

காரைக்குடி அருகே துணை மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்து தீ விபத்து

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் துணை மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்நிலையத்தில் 3 டிரான்ஸ் பார்மர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 230 கே.வி திறன் கொண்ட டிரான்ஸ் பார்மர்கள் ஆகும். இந்த 3 டிரான்ஸ் பார்மர்களுக்கு இடையே உள்ள டிரான்ஸ் பார்மர் அதிகளவிலான அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது.

இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் மின்மாற்றியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் வெகுநேரமாக திணறி ஒருவழியாக தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் எந்தவிதமான உயிர்பலிகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்ததும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


Tags : Transformer ,Karaikudi Transformer ,sub-station , Karaikudi, sub power station, transformer, fire
× RELATED துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் தீ