×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம் கொசு வலை வழங்க உத்தரவு!

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. முதலில் கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி தரப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, நவ.13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி அஜய் குமார் குஹர் தெரிவித்தார். இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்காக 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ப.சிதம்பரத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், சிதம்பரத்தின் உடல்நிலை மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை அளிக்கும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், ப.சிதம்பரம் உடல்நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எய்ம்ஸ் குழு இன்று தாக்கல் செய்தது.

அதில், சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளது. ஸ்டெரைல் அறை என்பது மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படும். சிதம்பரத்தின் அறையை சுத்தமாக வைத்து கொசுவலை பயன்படுத்த வேண்டும் என அறிக்கையில் மருத்து குழு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திற்கு கொசு வலை வழங்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ்க் வழங்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம், புறநோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும்; சிறப்புச் சிகிச்சை தேவையில்லை எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



Tags : Delhi High Court ,Chidambaram , INX Media, PC Chidambaram, Interim Bail, Delhi High Court
× RELATED ஈடி குற்றப்பத்திரிகையை தொடர்ந்து...