×

போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு எதிரான பணிமுறிவு நடவடிக்கையை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு எதிரான பணிமுறிவு நடவடிக்கை திரும்ப பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் உறுதி அளித்தப்படி தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1765 ஆரம்ப சுகாதார  நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 18,070 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு  டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம்  தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின்  நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார். ஆனால் டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். 7 நாட்களாக தொடர்ந்து பணிக்கு வராததாக கருதி, அவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வர், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்தனர். போராட்டத்தை வாபஸ் பெற்றதால், அவர்கள் மீது அரசு தரப்பில் எடுக்கப்பட்ட பணி முறிவு நடவடிக்கையும் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : withdrawal ,government ,Tamil Nadu ,doctors ,government doctors ,strike action ,doctors departments ,Lakshmi Narasimman , Government doctors, protest withdrawal, doctors struggle, temporary withdrawal, Lakshmi Narasimman, Chief Minister Edappadi, Minister
× RELATED சர்ச்சைக்குரிய சட்டம் வாபஸ் பெறப்படுகிறது பினராய் அறிவிப்பு