அமெரிக்க ராணுவத்தால் அபுபக்கர் பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ். இயக்கம்

பெய்ரூட்: அமெரிக்க ராணுவத்தால் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த பயங்கரவாதிகள், ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது தொடர்பாக அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். இயக்கத்தின் வளம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி நாயை போல கொல்லப்பட்டதாகவும் அவனது உடலை கடலில் வீசியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க படைகள் சூழ்ந்ததால் கோழையை போல கதறி அழுத பக்தாதி தனது மூன்று குழந்தைகளுடன் உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக பல முறை ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், அவை எல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்களாகவே அமைந்திருந்தன. இந்த நிலையில் பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ள ஐ.எஸ் இயக்கம் புதிய தலைவராக அபு இப்ராகிம் அல் ஹாஷிமி பொறுப்பேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஐ.எஸ் இயக்கத்தின் ஊடக பிரிவு வெளியிட்ட ஒளி நாடாவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


Tags : killing ,Abu Bakr ,Movement ,ISB ,US ,devotee , US Army, Abubakar devotee, killed, confirmed, IS. Direction
× RELATED சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதலில் டிரைவர் பரிதாப பலி