×

சிதம்பரத்தில் விஏஓ உள்பட பலரை ஏமாற்றிய போலி பெண் எஸ்.ஐ. கைது: உடந்தையாக இருந்த 2 பேரும் சிக்கினர்

சிதம்பரம்: சிதம்பரத்தில் விஏஓ உள்ளிட்ட பலரிடம் எஸ்.ஐ. என கூறி ஏமாற்றிய பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு நேற்று காலை எஸ்ஐ உடையில் ஒரு பெண் வந்துள்ளார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் தான் டெக்னிக்கல் பிரிவு எஸ்ஐ என அறிமுகப்படுத்தி கொண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஒருவருக்காக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவருடைய நடவடிக்கையில் பாஸ்கருக்கு சந்தேகம் எழுந்ததால் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பந்தபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் டிஎஸ்பியிடம் சென்னை சைதாபேட்டையில் குற்றப்பிரிவு எஸ்.ஐ.யாக பணிபுரிவதாக கூறியுள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக அளித்த தகவல்களால் போலி எஸ்ஐ என தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜதுரை மனைவி சூரியப்பிரியா(27) என்று தெரிய வந்தது. சூரியப்பிரியா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்திருந்த வேளையில் தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த ராஜதுரையை கடந்த 6 மாதத்திற்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல இடங்களில் போலீஸ் எஸ்ஐ சீருடை அணிந்து கொண்டு பலரை ஏமாற்றியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்கரபாணி(35) என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய போதுபோலீசில் சிக்கியுள்ளார். அவருக்கு சிபாரிசு செய்வதற்காக போலீஸ் சீருடையில் வந்தபோது சூரியப்பிரியா பிடிபட்டார். மேலும் சிதம்பரம் விஏஓ அசன்கபார் என்பவரிடமும் எஸ்ஐ என கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதனையடுத்து விஏஓ கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து சூரியப்பிரியா(27), அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ராஜதுரை(28), சக்கரபாணி(35) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : SI ,Chidambaram ,VAO , Chidambaram, a cheated, fake girl, S.I. Arrested
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ