×

ஆழ்துளை குழாய் இருந்த இடத்தில் மாலை போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு குழந்தை உடலை கடைசி வரை அதிகாரிகள் காட்டவே இல்லை: சுஜித் பெற்றோர் கண்ணீர் பேட்டி

மணப்பாறை:  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ் (30). மனைவி கலாமேரி (25). இவர்களது 2வது மகன் சுஜித்வில்சன் (2) கடந்த 25ம் தேதி மாலை 4.30 மணியளவில் வீடு அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அன்று முதல் 4 நாட்கள் குழந்தையை மீட்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் முயன்றனர். 6 அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர். ஆனால் மீட்க முடியவில்லை. 5வதுநாள், சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றில் அதிகாலை 2 மணியளவில் துர்நாற்றம் வீசுவதாக மீட்பு குழுவினர் கூறியதையடுத்து சுஜித்தின் பெற்றோரிடம் அமைச்சர்கள், அதிகாரிகள் கூறினர். இதனை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். அவனது உடலையாவது மீட்டு கொடுங்கள் என்றனர்.

அதை தொடர்ந்து பெற்றோர், பத்திரிகையாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய அதிகாரிகள், ஆம்புலன்ஸ் கொண்டு வந்து குழந்தை விழுந்த இடத்தில் தயாராக வைத்தனர். தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்டதாக கூறி புளு கலர் பிளாஸ்டிக் கவரில் வைத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சவப்பெட்டியில் வைத்தனர். உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு ெசல்லப்பட்டு ஆவராம்பட்டி அருகே உள்ள பாத்திமாபுதூர் கிறிஸ்தவ கல்லறையில் காலை 8 மணியளவில் குழந்தை சுஜித் உடல் இருந்த சவப்பெட்டியை நல்லடக்கம் செய்தனர். சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது சுஜித் தவறி விழுந்து இறந்த ஆழ்துளை கிணற்றில் மகனின் உடல் இருப்பதாக நினைத்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர் வணங்கி வருகின்றனர். இதுகுறித்து சுஜித் தாய் கலாமேரி கூறியதாவது: இறந்த சுஜித்துக்கு 16ம் நாள் காரியம் மற்றும் 30ம் நாள் காரியம் முடிந்த பின், அவன் சிக்கி இறந்த ஆழ்துளை கிணற்றில் சிலுவை நட்டு எங்கள் வசதிக்கேற்ப நினைவு ஆலயம் எழுப்ப முடிவு செய்துள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது நான் ப்ளஸ்2 முடித்துள்ளேன். எனது கணவர் 10ம் வகுப்பு படித்து கட்டிட தொழிலுக்கு செல்கிறார். எங்களுக்கு ஏதேனும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆவண செய்வதாக முதல்வர் கூறினார்.இவ்வாறு கலாமேரி தெரிவித்தார்.

தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கூறும்போது, எனது மகன் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். சாப்பாட்டைவிட நொறுக்கு தீனி அதிகம் தின்பான். இதனால் அவனுக்கு எட்டாத உயரத்தில் கொக்கியில் தின்பண்டங்களை வைத்து விடுவேன். ஆனாலும் சேர் எடுத்து வந்து அதில் ஏறி எடுத்து கொடு என அடம்பிடித்து நொறுக்கு தீனியை திண்பான்.  29ம் தேதி அதிகாலை அவனது உடலை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் உடலை எடுப்பதை பார்க்க விடவில்லை. உங்கள் மகன் உடல், நீங்கள் பார்க்கும் நிலையில் இல்லை என கூறி  எங்களை அங்கு இருக்க வேண்டாம் என்றனர். ஆனாலும் அந்த சம்பவம் பற்றி கேட்க வேண்டாம் என கூறி அழுதார். மருத்துவமனையில் மகனின் உடலை பார்த்தீர்களா என கேட்ட போது, இல்ைல. கடைசி வரை எனது மகன் சடலத்தை எங்களுக்கு அதிகாரிகள் காட்டாமல் ஏமாற்றி விட்டனர். ஆழ்துளை கிணற்றில் மோட்டார் விழுந்து விட்டால் இந்த பகுதியில் பிரபலமான சந்தியாகு என்பவரை அழைத்து மீட்போம்.  மீட்பு குழுவினரிடம் கூறியும் அவரை அனுமதிக்கவில்லை. சந்தியாகுவை அனுமதித்திருந்தால் சுஜித்தை காப்பாற்றி இருக்கலாம். இதைத்தான் பொதுமக்களும் கூறி வருகின்றனர் என்றார்.


வீட்டை கண்காணிக்கும் போலீசார்
சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மற்றும் பக்கவாட்டில் தோண்டிய சுரங்கத்தினை உடனடியாக கான்கிரீட் கலவை ெகாண்டு மூடினர். தொடர்ந்து கலாமேரிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெண் செவிலியர் மற்றும் அவர்களது வீட்டிற்கு வந்து செல்வோர் குறித்து தகவல் அறியவும், வாகனங்களின் எண்களை பதிவு செய்ய காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags : parents ,Sujith ,ones , Sujith's parents , not show the child's body , till end
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது