×

இந்திரா 35வது நினைவுதினம் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 35வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது 35வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இந்திராகாந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் வியக்கத்தக்க உறுதி மற்றும் தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்கிறோம். பிரதமராக நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு மகத்தானது. அனைத்து இந்தியர்களிடமும் அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார்” என பதிவிடப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தியும் டிவிட்டரில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவுகூர்ந்துள்ளார். “எனது பாட்டி இந்திராகாந்தியின் தியாக நாள். உங்களது உறுதியான நோக்கம், அச்சமற்ற முடிவுகளில் இருந்து கற்றுக்கொள்கிறேன். எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள். எனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திராகாந்திக்கு எனது அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியும் இந்திரா காந்திக்கு டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Tags : leaders ,Congress ,Indira ,Anjali ,35th Memorial , Indira, 35th Memorial, Congress leaders, Anjali
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...