×

வாட்ஸ் அப்பில் ஊடுருவி இந்திய பத்திரிகையாளர்களை உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம்: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

புதுடெல்லி: வாட்ஸ் ஆப்-ல் உளவு மென்பொருள் மூலமாக இந்தியாவில் உள்ள சில பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலநாடுகளைச் சேர்ந்த முக்கிய நபர்களை இஸ்ரேல் நிறுவனம் ஒன்று கண்காணித்து பல அமைப்புகளுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவான பதில் அளிக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு ஐடி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். இதில் இந்தியர்கள் 40 கோடி பேர். இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற கண்காணிப்பு நிறுவனம் உளவு மென்பொருளை பயன்படுத்தி 4 கண்டங்களைச் சேர்ந்த தூதர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் என் 1400 பேரின் போன்களை ஹேக் செய்து கண்காணித்து பல நிறுவனங்களுக்கு தகவல் அளித்துள்ளது. இதில் இந்தியர்களும் அடங்குவர்.

யாருடைய உத்தரவின் பேரில் இஸ்ரேல் நிறுவனம் இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது என தெரியவில்லை. இதை கடந்த மே மாதம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய வாட்ஸ் ஆப் நிறுவனம் என்எஸ்ஓ குழுமம் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தியாவில் யாருடைய போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்ற விவரத்தை வாட்ஸ் அப் வெளியிடவில்லை.

உளவு குற்றச்சாட்டை மறுத்துள்ள என்எஸ்ஓ நிறுவனம், ‘‘தீவிரவாதம் மற்றும் கடுமையான குற்றங்களை எதிரான நடவடிக்கையில் உதவ அரசு உளவு நிறுவனங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே இந்த உளவு தொழில்நுட்ப சேவையை வழங்கினோம்’’ என கூறியுள்ளது. இந்த உளவு நடவடிக்கை தொடர்பாக விரிவான பதில் அளிக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தனிநபர் ரகசியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’’என கூறியுள்ளார்.


Tags : agency ,Indian ,Israeli ,journalists ,government , Whats up, infiltrating, spying on Indian journalists, Israel
× RELATED தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக...