×

போலி இயந்திரத்தை வாங்கி 3.50 கோடி இழந்த தொழிலதிபர்: 22 பேருக்கு போலீஸ் வலை

பெங்களூரு: பெங்களூருவில் தொழிலதிபர் ஒருவரிடம் போலி ரைஸ் புல்லிங் இயந்திரத்தை கொடுத்து ரூ.3.50 கோடி மோசடி செய்த 22 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு கொரப்பனபாளையா பி.ஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் செய்யத் சலீம் (34). தொழில் அதிபரான இவரை 22 பேர் கும்பல் சந்தித்து தங்களிடம் ரைஸ் புல்லிங் இயந்திரம் உள்ளது. இதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும். 100 சதவீதம் உண்மையானது இந்த இயந்திரம். பல முறை நாங்கள் சோதித்து விட்டோம். வேண்டுமென்றால் டி.ஆர்.டி.ஓ.வில் இருந்து சில கருவிகளை வாங்கி உங்களுக்கு சோதனை செய்து காண்பிக்கிறோம் என்று கூறினர். அவர்களின் இந்த பேச்சை நம்பிய சலீமிற்கு ரைஸ் புல்லிங் இயந்திரத்தை வாங்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உங்களுக்கு வேண்டாம் என்றால் சொல்லுங்கள் நாங்கள் நாசாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுகிறோம் என்றனர்.

மர்ம நபர்கள் நாசா, டி.ஆர்.டி.ஓ என்று பெரிய பெரிய ஆய்வு கூடங்கள் பெயரை கூறியதும், சலீம், அந்த இயந்திரத்தை ஒரிஜினல் என்று நம்பிவிட்டார். இதையடுத்து மர்ம நபர்களிடம் பேரம் பேசப்பட்டது. அப்போது அவர்கள் ரூ.3.50 கோடி  கொடுக்கவேண்டுமென்று கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக் கொண்ட அவர் முன்தொகையாக ரூ.2 கோடி கொடுத்தார். மீதமுள்ள தொகையை ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் செலுத்துவதாக கூறினார். 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வாங்கப்பட்ட இந்த ரைஸ் புல்லிங் இயந்திரத்திற்கு மீதி தொகையையும் செலுத்தி முடித்து  விட்டார். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. முழு தொகையையும் பெற்றுக் கொண்ட பின்னர் மர்ம நபர்கள் இவரது கண்ணில் படவில்லை. மேலும் செல்போன் தொடர்பையும் துண்டித்துவிட்டனர்.
இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் உடனே இது குறித்து திலக்நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Businessman ,machine Businessman , Businessman, 3.50 crores, buy ,fake machine
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்