×

கவுரிபிதனூர் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுகிறது மஞ்சேனஹள்ளி தனி தாலுகா ஆகிறது: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் கவுரிபிதனூர் தாலுகாவை இரண்டாக பிரித்து மஞ்சேனஹள்ளியை புதிய தாலுகாவாக உருவாக்குவது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மாதுசாமி கூறினார்.
பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமைச்சர் மாதுசாமி செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அவர் கூறியதாவது:சிக்கப்பள்ளாபுரா மாவட்டம் கவுரிபிதனூரு தாலுகா மிகவும் பெரியதாக இருப்பதால் மஞ்சேனஹள்ளி புதிய தாலுகாவாக மாறுகிறது. இதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைத்துள்ளது.  இதுதவிர 2019-24 புதிய ஜவுளி கொள்கை குறித்து விரிவாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. கல்யாண கர்நாடகா, ஐதராபாத் கர்நாடகா, பெங்களூரு நகரம், கிராமப்புறம் என நான்கு பகுதிகளாக   பிரிக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என்றும் முதற்கட்டமாக கல்யாண கர்நாடகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாநிலத்தில் புதிதாகஇரும்பு தாது வெட்டி எடுப்பதற்கு அனுமதி வழங்க தடை விதிப்பது என்றும் அதே நேரம் இயங்கி கொண்டிருக்கும் இரும்பாலைகளை புனரமைப்பு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  மாநில தொழில் கொள்கையில் உள்ளூர்வாசிகளுக்கு சி மற்றும் டி பிரிவு வேலைகளில் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைப்பதற்கும் பொதுப்பணித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதுதவிர தென்கனரா மாவட்டம் பண்ட்வால்  தாலுகா நரிகொம்பு பல கிராம கூட்டு குடிநீர் தி்ட்டத்திற்காக ரூ.18 கோடி, சாம்ராஜ்நகர் தீனபந்து அறக்கட்டளைக்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் அமைச்சரவை முழுமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. கால்நடை மருத்துவ துறையில் தற்போது 80 மருத்துவர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. இதில் 61 இடங்களை நிரப்புவதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைத்துள்ளது.  37 லட்சம் மாணவிகளுக்கு தலா ரூ.250 செலவில் சீருடை வழங்கவும், உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஷு, சாக்ஸ், பெல்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதற்காக ரூ.11.75 கோடி விடுவிக்கவும், பெங்களூருவில் திட திரவ கழிவு மேலாண்மை திட்டங்களை அமல்படுத்துவதற்காக ரூ.160 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கால்நடை பாதுகாப்பு, தீவன வங்கி உள்ளிட்டவை ஏற்படுத்தவும் அரசு முன்வந்துள்ளது. உயர் கல்வித்துறையில் முதல்வர் உள்ளிட்ட 2203 பேர்கள் பணி நியமனத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. பெங்களூருவில் குப்பை பிரச்னை தலை தூக்குகிறது. இதை தடுப்பதற்காக குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு முன்வந்துள்ள என்இஜி நிறுவனத்திற்கு 20 ஏக்கர் நிலம் 25 வருடத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இவ்வாறு மாதுசாமி கூறினார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாஜி எம்எல்ஏ சுதாகர், முதல்வர் எடியூரப்பாவிடம் தனி தாலுகா கோரிக்கையை  முன்வைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் புதிய தாலுகா உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Gauripithanur Taluk ,Taluk ,two ,Cabinet Meeting ,Cabinet , Gauripithanur ,taluk , Manjenahalli,results
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...