×

நிர்பயா பலாத்கார வழக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்கலாம்: குற்றவாளிகளுக்கு 7 நாள் அவகாசம்

புதுடெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கில், சட்டரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்துவிட்டன என்றும், மரண தண்டனைக்கு எதிராக ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்ய மட்டுமே வாய்ப்புள்ளதாகவும் குற்றவாளிகளிடம் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012 டிசம்பர் 16  ம் தேதி தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பலாத்காரம்  செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக  சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அப்பெண், கடந்த  2012ம் ஆண்டு  டிசம்பர் 29ம் தேதி  அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி இறந்தார்.இந்த சம்பவத்தில் 6 பேரும் கைது செய்யப்பட்டு  அவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு மரணதண்டனை  விதித்தது. இதனிடையே விசாரணை காலத்தில், கைது செய்யப்பட்டவர்களில், ராம்  சிங் என்பவர் திகார் சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.  

மற்றொருவர், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி என  நிரூபிக்கப்பட்டு, சிறுவன் என்பதால் சீர்திருத்த வசதியில் மூன்று ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால்,  டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2017ம் ஆண்டின் தீர்ப்பை மறு பரிசீலனை  செய்யக்கோரி மற்ற குற்றவாளிகளான முகேஷ் (31), பவன் குப்தா (24) மற்றும்  வினய் சர்மா (25) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  ஆனால, அதனை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி தள்ளுபடி செய்தது.  நான்காவது மரண தண்டனை குற்றவாளியான அக்‌ஷய் குமார் சிங் (33) உச்ச  நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை.இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையிலிருந்து விலக்கு பெறும் சட்டரீதியான அனைத்து வழிமுறைகளும் முடிந்து விட்டன என்றும், இனி ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்து மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குற்றவாளிகளுக்கு சிறை நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி தெரிவித்துள்ளது.

மேலும், நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என கருதி நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படும் நீதிமன்றம் மரணதண்டணையை நிறைவேற்ற உத்தரவிடும். அதனை செயல்படுத்த தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் தொடங்கும் எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்டது பற்றி சிறை நிர்வாக இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் உறுதி செய்தார்.


Tags : President ,offenders , Nirbhaya ,rape , President,mercy,offenders
× RELATED ஐசிசி புதிய தலைவராக கிரெக் பார்க்ளே தேர்வு