×

அபரஜித், கெய்க்வாட் அபார சதம்: தியோதர் கோப்பை இந்தியா பி வெற்றி

ராஞ்சி:  இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் நடத்தும் உள்ளூர் ஒருநாள் போட்டியான தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. முதல் போட்டியில் ஹனுமா விகாரி தலைமையிலான இந்தியா ஏ அணியும்,   பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா பி அணியும் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா பி  வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், பிரியாங் பஞ்சால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.   உனத்கட் பந்து வீச்சீல், பஞ்சால் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த இளம் வீரர் யாஷஸ்வி  ஜெய்ஸ்வால்  34 பந்துகளில் ஒரு சிக்சர், 4பவுண்டரி அடித்து 34 ரன் எடுத்திருந்தேபோது சித்தார்த் கவுல் பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச்  கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு கெய்க்வாட்டுடன், தமிழக வீரர் பாபா அபரஜித் இணை சேர ஆட்டத்தில் அனல் பறந்தது.   அதற்கு அஸ்வின் தடை போட்டார். அவர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆன கெய்க்வாட் 122 பந்துகளில்  8பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 113 ரன் குவித்திருந்தார்.

அடுத்து வந்த கேதர் ஜாதவை 5 ரன்னில் வெளியேற்றினார் அஸ்வின்.   தொடர்ந்து 101ரன்னுடன் களத்தில் இருந்த பாபா அபரஜித்தை ரன் அவுட்டாக்கினார் அஸ்வின்.  தங்கு பங்குக்கு விஜய் சங்கர் வேகம் காட்டி 16 பந்துகளில் 26 ரன்  எடுத்தவர் போட்டியின் கடைசி பந்தில் உனத்கட்டிடம் வீழ்ந்தார். அதனால் போட்டியின் முடிவில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது. அஸ்வின், உனத்கட் தலா 2, கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  அதனையடுத்து 303 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், தேவதூத் படிக்கல் இருவரும் முறையே 20, 10 ரன்களிலும், அடுத்து வந்த விஷ்ணு வினோத் 11  ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஹனுமா விகாரி  மட்டுமே அணியில் அதிகபட்சமாக 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.  

அமன்தீப் கேர், இஷான் கிஷண் முறையே 25, 26 ரன்னில் ரன் அவுட் ஆனதும், ஆல்ரவுண்டர் அஸ்வின் ரன் எடுக்காமல் வெளியேறியதும் இந்தியா ஏ தோற்பது உறுதியானது. அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற  இந்தியா ஏ  47.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா பி 108 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய இந்திய பி அணியின் ரூஷ் களரியா 3,  முகமது சிராஜ் 2,  கிருஷ்ணப்பா கவுதம் 1 விக்கெட்டை வீழ்த்தினர். தியோதர் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா சி-இந்தியா ஏ அணிகள் மோத உள்ளன.Tags : Aparajith ,Gaekwad Apara Chatham ,win , Aparajit, Gaekwad, Theodore Cup, India b
× RELATED இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி:...