×

கைச்செலவுக்கு பணம் இல்லாமல் வெ.இண்டீஸ் சென்ற இந்திய மகளிர் அணி

ஆண்டிகுவா: கைச் செலவுக்கு பணம் தராமல் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுக்கு விளையாட அனுப்பிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்  தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட்  போட்டி இன்று வெஸ்ட்  இண்டீஸ் தீவில் உள்ள ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இதற்காக இந்திய மகளிர் அணி சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் போய் சேர்ந்தது. ஆனால் அங்கு அவர்களுக்கு தினசரி செலவுகளுக்கு தேவையான பணத்தை கிரிக்கெட்  வாரியம்  தராத விவகாரம் இப்போது வெளியாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) புதிய நிர்வாகிகள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். அதனையடுத்து  இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்,  அணி நிர்வாகிகளுக்கான கணக்கில்  தினசரி கைச்செலவுகளுக்கான பணம் நேற்று முன்தினம் இரவு சேர்க்கப்பட்டது. இருந்தாலும் இந்த பிரச்னைகளுக்கு பிசிசிஐ பொது மேலாளர்(கிரிக்கெட் செயல்பாடுகள்) ஷபா கரீம்தான் காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்திய  மகளிர் அணி வெஸ்ட் இண்டீசுக்கு விளையாட செல்ல உள்ளதால்  கைச்செலவுக்கான பணத்தை வீராங்கனைகள், அணி அலுவலர்களின் கணக்கில் சேர்க்கும்படி அணி நிர்வாகம் செப்.23ம் தேதியே கரீமுக்கு கடிதம் எழுதியுள்ளது. மீண்டும்  செப்.25ம்தேதியும், அக்.24ம் தேதியும் நினைவூட்டல் கடிதம் எழுதியும் பலனில்லை.

நிர்வாகிகள் குழுவின் கீழ் பிசிசிஐ இருந்தபோது ஆரம்பித்த  செயல்முறைகள் புதிய நிர்வாகிகள் வந்த பிறகும் முடிவுக்கு வரவில்லை. அதற்கு பொறுப்பில் உள்ள கரீமின் அலட்சியப் போக்குதான் இதற்கு காரணம் என்று பலரும் குற்றம்  சாட்டுகின்றனர். அவரால்தான் இந்திய வீராங்கனைகள் வெளிநாட்டுக்கு பணம் இல்லாமல் சென்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. சபா கரீம் இப்படி குற்றச்சாட்டுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல.  ஏற்கனவே மகளிர் அணிக்கான  உதவியாளர்களை தேர்வு செய்த முறையிலும் கரீம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியா-வெ.இண்டீஸ்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் இரவு பகல் ஆட்டங்களாக நடைபெற உள்ளன. போட்டிகள்  ஆண்டீகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கில் நவ.1, 3, 6 தேதிகளில் நடைபெறும். வெஸ்ட்  இண்டீசுக்கு எதிரான போட்டிகளில் இதுவரை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியின் கைதான் ஓங்கியுள்ளது.  இந்த 2 அணிகளும் 2013 முதல் 2017 வரை மோதிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிப் பெற்றுள்ளது.  எனவே இன்று தொடங்கும் ஒருநாள் தொடரிலும் இந்தியா கை ஓங்கவே வாய்ப்புகள் அதிகம்.

Tags : team ,women ,Indian ,Indies , No Money, West Indies, Indian Women's Team
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...