×

சமையல் செய்தவர்களின் சிலிண்டர் வெடித்ததால் விபரீதம் பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ 74 பேர் உடல் கருகி பரிதாப சாவு: அடையாளம் கூட காண முடியாத அளவுக்கு எலும்புக்கூடான உடல்கள்

லாகூர்: பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் பயணிகள் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 74 பேர் உடல் கருகி பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து  லாகூர் நோக்கி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ரகீம் யார் கான் பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. ரயில்  வேகமாக சென்றதால் காற்றின் வேகம் அதிகரித்து தீ மளமளவென அடுத்தடுத்த 3 பெட்டிகளுக்கு பரவியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே  குதித்தனர். இதனிடையே ரயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு ரயில்வே மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.

இந்த தீ விபத்தில் 74 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலர் ரயிலில் இருந்து கீழே குதித்ததால் இறந்ததாக  கூறப்படுகின்றது. மேலும் 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்தின்போது ரயிலின் உள்ளே இறந்தவர்களில் பலர் உடல்கருகி எலும்புக்கூடாகி உள்ளனர். இதனால் இறந்தவர்களை அடையாளம் காண முடியாமல் அதிகாரிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
ரயில்வே அமைச்சர் ஷேக் ரசீத் அகமத் கூறுகையில், “தீ விபத்தில் இஸ்லாமிய போதகர்கள் அதிகம் உயிரிழந்துள்ளனர். லாகூரில் நடக்கும் பிரதான ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்லாமிய போதகர்கள் குழுவாக  சென்றுள்ளனர்” என்றார்.

ரயிலில் பயணம் செய்த பயணிகளில் சிலர் தங்களுடன் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விதிமுறைக்கு மாறாக கொண்டு வந்துள்ளனர். ரயில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் காலை உணவு தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை  பற்ற வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து தீப்பிடித்துள்ளது. ரயிலில் ஏற்பட்ட  தீயில் சிக்கி இறந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான் கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Pakistani ,train crashes , Cylinder, Pakistani, train running, 74 killed
× RELATED ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய வீரர் மரணம்