×

ஐஎஸ் தலைவன் பாக்தாதியை வேட்டையாடிய புகைப்படங்கள் வெளியீடு

வாஷிங்டன்:  ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதியை அமெரிக்க படைகள் வேட்டையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. உலகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ்  தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் அபுபக்கர் அல் பாக்தாதி. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தீவிரவாத செயல்களின் மூலமாக அச்சுறுத்தி வந்தான். தனக்கு எதிராக செயல்படும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை மிரட்டியும்  ஆடியோக்களை வௌியிட்டு வந்தான். இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்காக அமெரிக்க அரசு தீவிரநடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பாக்தாதி தலைமறைவாக இருந்தான். சிரியாவின்  இட்லிப் மாகாணத்தில் பரிஷா கிராமத்தில் பதுங்கி இருந்த பாக்தாதியை அமெரிக்க படைகள் கடந்த சனிக்கிழமை சுற்றி வளைத்தன. அவர்களிடம் இருந்து தப்பிக்க, தனது 3 மகன்களுடன் ரகசிய குகைக்குள் ஓடிய பாக்தாதியை அமெரிக்க  ராணுவத்தின் மோப்ப நாய் வேகமாக துரத்தியதோடு வீரர்களும் நெருங்கி சுற்றி வளைத்தனர்.

தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த பாக்தாதி தனது மகன்களுடன், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். அதில், அவனது 3 மகன்களும், அவனும் உடல் சிதறி இறந்தனர். இந்நிலையில், பாக்தாதியை தேடும்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்டது. இதில் கருப்பு வெள்ளையில் தெரியும் இந்த வீடியோ காட்சியில், கீழே இருந்து சிலர் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.  மேலும் பாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நோக்கி அமெரிக்க வீரர்கள் ஓடுவதும் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு கூடுதல்  தகவல்களையும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தளபதி கென்னத் மெக்கென்சி கூறுகையில், “பாக்தாதியுடன் இறந்தது  2 சிறுவர்கள்தான்.  அவர்கள் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். அதிபர் கூறியது போல 3 பேர்  கிடையாது. சம்பவ இடத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள், ஆவணங்கள் மீட்கப்பட்டன” என்றார்.

Tags : chief hunting ,IS ,Baghdadi ,IS Chief ,Hunting Down Baghdadi , IS chief Baghdadi, release of photos
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின்...