×

ஐரோப்பிய எம்பி.க்களின் பயணத்தால் காஷ்மீர் விவகாரம்: சர்வதேசமயமாகவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி:‘ஐரோப்பிய யூனியன் எம்பி.க்கள் குழுவின் பயணம் மூலம் காஷ்மீர் விவகாரம் சர்வதேச மயமாகவில்லை,’ என வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. காஷ்மீர் நிலவரத்தை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் இந்தியா வந்திருந்தனர். அவர்கள் பிரதமர் மோடி நேரில் சந்தித்து, காஷ்மீர் நிலவரம் குறித்து பேசினர். இவர்கள் காஷ்மீர் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சொந்த நாட்டு தலைவர்களை காஷ்மீருக்குள், அனுமதிக்காமல் வெளிநாட்டு தலைவர்களை அனுமதிப்பதா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்,‘‘ஐரோப்பிய யூனியன் எம்பி.க்கள் குழு வெளியுறவுத் துறை மூலமாக வரவில்லை. இவர்களின் பயணம் நாட்டு நலனுக்கு நல்லதா என்பதுதான் முக்கியம். இது மக்கள் தொடர்பு சம்பந்தப்பட்டது என நாங்கள் கருதுகிறோம். இவர்களின் பயணம் மூலம் காஷ்மீர் விவகாரம் சர்வதேச மயமாகவில்லை. ஐரோப்பிய யூனியன் எம்பி.க்களின் கருத்துக்கள், காஷ்மீரின் உண்மை நிலவரம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய அவர்களின் புரிதலை வெளிப்படுத்துகிறது,’’என்றார்.

காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம், சட்டவிரோதம், செல்லுபடியாகாது: சீனா கருத்து

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் சாங் நேற்று அளித்த பேட்டியில்,‘‘ஜம்மு காஷ்மீர், லடாக்கை இந்திய அரசு யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதன் நிர்வாக எல்லைக்குள், சீன பகுதிகளும் அடங்கியுள்ளன. இதை சீனா வன்மையாக எதிர்க்கிறது. சீனாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், இந்தியா தனது உள்நாட்டு சட்டங்களையும், நிர்வாக பிரிவுகளையும் தன்னிச்சையாக மாற்றியுள்ளது. இது சட்ட விரோதம். செல்லாது.

இந்த நடவடிக்கை, சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை எந்த விதத்திலும் மாற்றாது. சீன எல்லை இறையாண்மையை, நமது ஒப்பந்தப்படி இந்தியா நேர்மையுடன் மதிக்க வேண்டும் எனவும், எல்லைப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்க எல்லைப் பகுதியில் அமைதி காக்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்துகிறது,’’என்றார்.

Tags : affair ,European ,Kashmir ,MPs , travel of Kashmir, European MPs, is not international
× RELATED சில்லிபாயின்ட்..