×

செல்போன் பறிமுதல் வழக்கில் கோர்ட்டில் ஆஜர் தனி அறையில் அடைத்து கொடுமை பரோல், விடுதலையை தடுக்க சதி : முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

வேலூர்: தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர், பரோல், விடுதலை தடுக்கவே சதி செய்கின்றனர் என்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன்  சிறைத்துறை மீது பரபரப்பு குற்றம் சாட்டினார். வேலூர் மத்திய சிறையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம் தேதி முருகன் தங்கியிருந்த அறையில் செல்போன், சிம் கார்டு, சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வேலூர் ஜேஎம் 1 கோர்ட்டில் முருகனை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் நிஷா உத்தரவிட்டார். இதையடுத்து பலவீனமாக இருந்த முருகனை போலீசார் வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.

அப்போது நிருபர்களிடம் முருகன் கூறுகையில், ‘சிறை வளாகத்தில் அதிகாரிகளை மீறி எங்களால் மூச்சுவிடக்கூட முடியாது. அப்படி இருக்க செல்போனை எப்படி நான் பயன்படுத்த முடியும். புரட்டாசி மாதம் என்பதால் 45 நாட்களாக பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால், எனக்கு பிச்சை போடுவது போல் பழங்கள் தந்தனர். பரோலையும், விடுதலையையும் தடுக்கவே இந்த சதி திட்டம் நடக்கிறது. மேலும், தனி அறையில் அடைத்து என்னை ஆன்மிகவாதியாக கூட இருக்கவிடாமல் கொடுமை செய்கின்றனர். எப்படிப்பட்ட கொடுமை என்பதை இப்போது சொல்லக்கூட முடியவில்லை. நான் 14 நாட்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்’ என்றார்.

Tags : Murder , Conspiracy ,prevent cell phone ,confiscation
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !