×

கிருஷ்ணகிரி அருகே மிகப்பெரிய பாறைக்கீறல் ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுவினர், வேப்பனஹள்ளி எம்எல்ஏ., முருகன் தலைமையில், வேப்பனஹள்ளி அடுத்த நக்கநாயன பண்டா என்னுமிடத்தில் உள்ள மலையில், தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீறல் ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியம் கொங்கணப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதியில், 2 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்ற இடம் உள்ளது. அங்கு மழை நீர் சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடத்தில் உள்ள 3 பாறைகளில், பாறைக்கீறல் ஓவியங்கள் காணப்படுகின்றன. பாறை ஓவியங்களும், பாறைக் கீறல்களும், வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத்தின் முதல் பாறை ஓவியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல், தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய அதாவது சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீறல்களும் முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிருந்து 50 அடி தொலைவிலேயே, பெருங்கற்படைக் காலத்தை சேர்ந்த கற்திட்டைகளும் காணப்படுவதால், இப்பெரிய பாறைக்கீறலின் காலத்தையும் பெருங்கற்படைக்காலம் என தீர்மானிக்கலாம். இக்கால ஓவியங்களில் உருவங்கள், ஒற்றை கோட்டால் வரையப்பட்டிருக்கும். ஆனால், இக்கீறல் உருவமோ இரட்டைக் கோட்டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத்தில் கீறப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 6 அடி உயரத்தில் உள்ள தாய் தெய்வத்தின் வடிவமாக இருக்கலாம். இருபுறம் சடையும், உடலின் அமைப்பு கத்திரி போலவும் உள்ளது. தெய்வத்தின் இருபுறமும் இரு சிற்றுருவங்கள் வரையப்பட்டுள்ளது. இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என அதன் அமைப்பை வைத்து சொல்லலாம். தலையும், கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும், உடல் கத்திரிக்கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டுள்ளது. மூன்றாவது பாறையில் உள்ள உருவம் மிகவும் தேய்ந்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, இதுவே தமிழகத்தில் இதுவரை அறியப்பட்ட பாறைக்கீறல்களில் பெரியதாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Krishnagiri ,rock paintings ,Discovery , Discovery , largest rock paintings, Krishnagiri
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்