×

மகா புயலால் தமிழகத்தில் பல இடங்களில் கன மழை நீலகிரியில் 12 இடங்களில் மண்சரிவு

* கொடைக்கானலில் பாலம் துண்டிப்பு
* குமரியில் வீடுகள் இடிந்து விழுந்தன

குன்னூர்,நவ.1: தமிழகம் முழுவதும் மகா புயல் காரணமாக மழை கொட்டி வருகிறது. நீலகிரியில் 12 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.  கொடைக்கானலில் முக்கிய பாலம் துண்டிக்கப்பட்டது. குமரியில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மகா புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில்  கடந்த 3 நாட்களாக பல இடங்களில் மழை இரவு பகலாக பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. புயல் காரணமாக நேற்று பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் 12 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.  மஞ்சூர் அருகே தேவர்சோலை பகுதியில் சாலையோர மண்திட்டு சரிந்து விழுந்தது. அதனுடன் மரமும் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர்-ஊட்டி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். கொடைக்கானலில்: திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை காரணமாக கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் வடகவுஞ்சி அடுத்த மேல்பள்ளம் பகுதிகளில் நேற்று காலை மரங்கள் முறிந்து விழுந்தும், சாலையோரங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரங்கள், மண்சரிவை அகற்றியதும் சில மணிநேரங்களுக்கு பின் போக்குவரத்து சீரானது.

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பள்ளங்கி, கோம்பை செல்லக்கூடிய சாலையில் உள்ள முக்கியமான தரைப் பாலம் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கற்கள், மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இன்னும் பல மலைக்கிராமங்களில் போக்குவரத்து சீராகவில்லை. இப்பகுதி மக்கள் அவதி தொடர்கிறது. வீடுகள் இடிந்து விழுந்தன:  குமரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் 23 வீடுகள் இடிந்து விழுந்தன. குளச்சல் அருகே திக்கணங்கோடு, செம்பொன்விளையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மரிய மதனலேனாள்(80) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

500 ஏக்கர் மூழ்கியது: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அருணாச்சல பிள்ளை பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பாசனம் மூலம் 500 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. தொடர்மழையால்  ஏரி நிரம்பியது. ஆனால், கரைகள் போதிய வலுவில்லாமல் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால், அருகிலுள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு இருந்த உளுந்து, கம்பு, நெல், கரும்பு உள்ளிட்டவை மூழ்கி உள்ளது. இதையடுத்து, கரை உடைப்பை தென்னை மரங்கள், மண் மூட்டைகள் கொண்டு கரைகளை கட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது நாளாக குளிக்க தடை

குற்றாலத்தில் தொடர்மழையால் மெயினருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டுகிறது. நேற்றும் மழை பெய்ததால் மூன்றாவது நாளாக நேற்றும் மெயினருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதேபோல குமரி குற்றாலம் என அழைக்கப்படும் குமரி திற்பரப்பு அருவியிலும் பயங்கர வெள்ளம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.



Tags : places , Heavy rains ,12 places
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு