×

தலா 1001 இழப்பீடு வழங்க வேண்டும் ஹெல்மெட் தகராறில் வக்கீலை கைது செய்த 2 போலீசுக்கு அபராதம்

* சீருடை, லத்தியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த நீதிபதி அறிவுரை

மதுரை: ஹெல்மெட் தகராறில் வக்கீலை கைது செய்த 2 போலீசார் அவருக்கு தலா ரூ.1001 இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீலாக பணியாற்றுகிறார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றார். கடந்த 25ம் தேதி இவரது உடல்நலம் பாதித்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வக்கீலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதுகுறித்து அவசர மனுவாக ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை வக்கீல் வேலுச்சாமிக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. புளியங்குடி தலைமை காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜராகினர். இரு போலீசாரும் தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, வக்கீலுக்கு இழப்பீடாக இருவரும் தலா ரூ.1001 வழங்கவும், வக்கீல் மீதான வழக்ைக கைவிடுவது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக நீதிபதி, வக்கீல்களும் - போலீசாரும் நண்பர்களாக இருக்க வேண்டும். போலீசார் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி போன்றவற்றை நல்ல விஷயங்களுக்காகவே பயன்படுத்த வேண்டுமெனவும் கருத்தை வெளிப்படுத்தினார்.


Tags : lawyer , 2 cops fined , holding helmet case
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது