×

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் நிறைவேற்றப்படும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மருத்துவர்களின் கோரிக்கை  நியாயமாக இருந்தால் அவை நிறைவேற்றப்படும். ஆனால் அதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ₹1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி, சமூக நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 52862 மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள் 130 பேருக்கும், 25 ஆயிரம் வீதம் 22 பேர் மற்றும் 50 ஆயிரம் வீதம் 49 என 71 பேருக்கு திருமண நிதி உதவியும், 2820 மதிப்புள்ள காதொலி கருவிகள் 131 பேருக்கும் வழங்கப்பட்டன.பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவர்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தை அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் எண்ணத்தை நிறைவேற்ற மருத்துவர்கள் பணிக்கு செல்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் எடுக்கும். ஆனால் மருத்துவர்கள் நெருக்கடி கொடுப்பது ஏற்புடையதல்ல.இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மாநில ஒற்றுமையை குலைக்கும் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அனுமதிக்க முடியாது. எதிர்கட்சிகள் மருத்துவர்கள் போராட்டத்திற்கு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை சமரசம் செய்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற செய்து அவர்களுக்காக அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தினால் மக்களுக்கு நலன் செய்கிறார்கள் என அவர்கள் எதிர்கட்சிகளை பாராட்டுவார்கள். நிதி நெருக்கடி இருந்தபோதும் மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷனை முதன் முதலாக தமிழகத்தில் செயல்படுத்தினோம். கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் அவை நிறைவேற்றப்படும். ஆனால் அதற்கு கால அவகாசம் எடுக்கும்.

கடலுக்கு சென்ற 270 படகில் 7 படகுகள் மட்டுமே இன்னும் வரவில்லை. இதில் 2 படகுகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வறட்சி, புயல், சுனாமி போன்ற காலங்களில் அரசு வெற்றி பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும் சமாளிக்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது.ஆழ்கடல் செல்லும் ஒவ்வொரு படகிற்கும் சாட்டிலைட் போன் தர அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கு மத்திய அரசு 50 சதவிகித மானியம் வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள 50 சதவிகிதத்தை தமிழக அரசு தர தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Doctors ,Jayakumar ,Minister ,Jayakumar Doctors , Doctors' demands , fulfilled if justified,Minister Jayakumar
× RELATED எண்ணி முடிக்கவே 2...