×

கோவை, தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கின; தீவிர விசாரணை

கோவை: தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள், லேப்டாப், செல்போன்கள், மெமரி கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புகளுடன் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூன் 12ம் தேதி கோவையில் சோதனை நடத்தினர். உக்கடம் அன்புநகர் முகமதுஅசாரூதீன்(32), தெற்கு உக்கடம் ஷேக்இதயத்துல்லா(38), குனியமுத்தூர் அபுபக்கர்(29), போத்தனூர் சதாம்உசேன் (26), தெற்கு உக்கடம் இப்ராகிம் என்கிற ஜாகின்ஷா(26) ஆகிய 5 பிடித்து விசாரித்தனர். இவர்களது வீடுகள், அலுவலகம் உள்பட 7 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது லேப்டாப், பென்டிரைவ், செல்போன், சி.டி. உள்பட முக்கிய ஆவணங்கள்

பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 பேரும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜகரான் ஹமீசுடன் சமூக வலைதளத்தில் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாத இயக்கத்தின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும் தெரியவந்தது. இதன்பின், 5 பேரும் கைது ெசய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகிய 2 பேரையும் கொச்சி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், உக்கடத்தை சேர்ந்த 2 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்ததும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட சிலருடன் 2 பேர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. இதனடிப்படையில், கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அமைப்பின் டி.எஸ்.பி. சாகுல் அமீது தலைமையிலான அதிகாரிகள் நேற்று கோவை வந்தனர். அவர்கள் காலை 6 மணிக்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சமீர் (22), உக்கடம் அண்ணாநகர் முதல் வீதியை சேர்ந்த சவுருதீன் (30) ஆகியோர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனை காலை 9.30 மணி வரை நீடித்தது. 2 பேரின் வீடுகளில் இருந்தும் 2 லேப்டாப், 2 செல்போன், 2 மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரிடமும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சிறிது நேரம் விசாரணை நடத்திவிட்டு அனுப்பினர். இவர்களில் சமீர், இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சென்னையில் பலமாதமாக தங்கியிருந்த சவுரூதீன், கடந்த 2 மாதத்துக்கு முன் கோவை வந்தார். தற்போது உக்கடம் லாரிப்பேட்டையில் டிபன் கடை நடத்தி வருகிறார். நாகை, திருச்சி: நாகை மாவட்டம் சன்னமங்கலத்தை சேர்ந்த முகமதுஅஜ்மல் (22) என்பவர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெற்றோர், நாகூர் மியாந்தெருவில் உள்ள உறவினர் சாதிக்அலி என்பவரது வீட்டில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாலை 5.40 மணிக்கு சாதிக்அலி வீட்டுக்கு சென்று முகமதுஅஜ்மலிடம் விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் ஒரு சிம்கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரை சேர்ந்தவர் சாகுல்அமீது (29). தனியார் பால்பண்ணையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவரது வீட்டுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை 6 மணிக்கு சென்றனர். வீட்டில் சாகுல்அமீது இல்லை. அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். சோதனை மற்றும் விசாரணை 1.30 மணி நேரம் நடந்தது. இதில் சாகுல் அமீதுக்கு சொந்தமான ஒரு செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

காயல்பட்டினம் கார் டிரைவர்:

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சேர்ந்த அபுல்ஹசன் சாதுலி (27) என்பவரது வீட்டில் நேற்று காலை 6.30 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் சோதனை நடத்தினர். கார் டிரைவரான இவரது வீட்டில் காலை 10.45 மணி வரை சோதனையிட்டனர். பின்னர் அபுல்ஹசன் சாதுலி பயன்படுத்தும் செல்போன், இரு சிம்கார்டுகள் மற்றும் ஒன்பது ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையின் போது வீட்டில் அபுல்ஹசன் சாதுலி இல்லை. தாய் மற்றும் அண்ணன், அண்ணி ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு காரில் சென்னை சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இளையான்குடி வாலிபர்: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டவுன் சாலையூர் எலுமிச்சை ஊரணி தெருவைச் சேர்ந்தவர் முகமது சிராஜூதின் (22). எலெக்ட்ரிக் வேலை செய்கிறார்.  இவரது வீட்டில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சோதனை நடத்தினர். தூக்கத்திலிருந்த சிராஜூதினை எழுப்பி விசாரித்துள்ளனர். பின்னர் அவரிடம் செல்போனை பறிமுதல் செய்துவிட்டு, சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்து விட்டு சென்றனர்.தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போன், சிம்கார்டு மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

தகவல்கள் ஆய்வு செய்யப்படும்

கோவையில் சோதனை நடத்தியது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா அவர்களை காவலில் எடுத்து நடத்திய விசாரணை அடிப்படையில் இந்த  சோதனை நடைபெற்றது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவற்றில் எந்த மாதிரியான  தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  தேவைப்படும் பட்சத்தில் 2 பேருக்கும் சம்மன் அனுப்பி கொச்சி  அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Tuticorin ,locations ,NIA ,investigation ,Coimbatore , NIA officials raid ,6 locations ,Tamil Nadu, Coimbatore and Tuticorin
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...