×

மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ்

* சுகாதாரத்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை
* 500 மருத்துவர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஏழாம் நாளாக மருத்துவர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட 500 டாக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதேநேரத்தில், இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் டாக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1,765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சில டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
ஏற்கனவே பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 500 டாக்டர்கள் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 7ம் நாளாக நேற்றும் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்தது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர். டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வளாகத்துக்குள் நுழைய முயன்ற டாக்டர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து டாக்டர்கள், போலீசார் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, டாக்டர்கள் கூட்டமைப்பினர் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டதுடன் மருத்துவமனை நுழைவாயிலில் போராட்டம் நடத்த முயன்றதால் டாக்டர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து, நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: நேற்று முன்தினம் வரை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் 1,556 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். மாலையில் 604 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். மொத்தம் 2,160 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். மொத்த பணியிலுள்ள 16,475 டாக்டர்களில் 2,523 பேர் மட்டும்தான் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவில்லை. போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்பினால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

நாளை (இன்று) காலைக்குள் பணிக்கு திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள், அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று சில மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்தில் வேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: பொய்யான தகவல்களை மாவட்ட வாரியாக சுகாதாரத்துறைக்கு அனுப்பி வருகிறார்கள். சில டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் சென்னை மருத்துவக்கல்லூரியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் என பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்மூலம் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு பெருகிக்கொண்டு வருகிறது. எங்களை பொறுத்தவரை எங்களை அழைத்து பேசும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும். ஒவ்வொரு முறையும் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் சொல்லி வருகிறார்.

நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்ற பேரணியை நடத்தினோம். ஏற்கனவே ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினோம். 4 நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். இப்போது 7 நாள் வேலை நிறுத்த போராட்டம், சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் கோரிக்கைகளை பரிசீலிக்கிறோம் என்று மட்டும் தொடர்ந்து அமைச்சர் சொல்லி வருகிறார். ஏற்கனவே 6 வாரங்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அளித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழியையே அமைச்சர் நிறைவேற்றவில்லை. இத்தனை போராட்டங்களுக்கு பின்னும், கோரிக்கைகளை நிறைவேற்றாத அமைச்சர்,  மீண்டும் பரிசீலிப்பதாக சொல்வதை நம்பி எப்படி பணிக்கு திரும்ப முடியும். இவ்வாறு லட்சுமி நரசிம்மன் கூறினார்.

போராட்டத்தை கலைக்க முயற்சி

போராட்டம் நடத்தி வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு துறைத்தலைவரிடம் இருந்து போன் வருகிறது. நீங்கள் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் குறித்துக்கொள்கிறோம். இல்லாவிட்டால் டிரான்ஸ்பர் செய்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது துறை மூலம் மருத்துவக்கல்லூரி டீனுக்கு உத்தரவிடப்பட்டு, அவர்கள் மூலம் துறைத்தலைவர்கள் போராடும் மருத்துவர்களை மிரட்டி போராட்டத்தை கலைக்க முயற்சிக்கிறார்கள்.

பொய் வழக்கு என போலீஸ் மிரட்டல்

தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர் ஒருவரின் வீட்டிற்கு போலீசை அனுப்பியுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் பொய் வழக்கு தொடருவோம் என்று போலீசார் மிரட்டியதாக டாக்டர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

Tags : doctors ,state , Dismisses, doctors who struggle,do not return to work
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை