×

கேரளாவில் பலத்த மழை எச்சரிக்கை: நாகர்கோவில் ரயில் தப்பியது

திருவனந்தபுரம்: மகா புயல் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு,  மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்  கடந்த 2 வாரங்களாகவே பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. அரபிக்கடலில் மகா புயல் உருவாகி இருப்பதால் கடந்த 2 நாளாக தினங்களாக  திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட தென்மாவட்டங்களில் பலத்த மழை  பெய்து வருகிறது. நேற்று இரவு விடியவிடிய மழை கொட்டியது. 2ம்  தேதி வரை  பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எர்ணாகுளம்,  திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி,  பரவூர் ஆகிய தாலுகாக்களிலும், திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர்,  சாவக்காடு ஆகிய தாலுகாக்களிலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இன்று நடத்த இருந்த  அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரள மாநில கடலோர  பகுதிகளில் மணிக்கு 65 கிேலா மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை உள்ள கடல் பகுதியில்  மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடற்கரை  பகுதிகளுக்கும், மலைப்பாங்கான பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் உள்பட  பொது மக்கள்  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெய்யாறு அணை இன்று காலை 9  மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர பகுதியில்  வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திருவனந்தபுரம் கலெக்டர்  கோபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில் ரயில் தப்பியது:
பாறசாலை அருகே இன்று காலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த சமயத்தில் நாகர்கோவிலில் இருந்து மங்களூர் செல்லும் பரசுராம் ரயில் வந்தது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்ட தகவல் கிடைத்ததால் அந்த ரயில் பாறசாலை ரயில் நிலையத்தில நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சென்று தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் ரயில் தப்பியது குறிப்பிடத்தக்கது.



Tags : Kerala ,Nagercoil , Heavy rains in Kerala: Nagercoil train escapes
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்:...