×

அதிகபட்சமாக குண்டாறில் 84 மி.மீ.,பதிவு: பாபநாசம் அணை 126 அடியாக உயர்ந்தது...நெல்லையில் 2வது நாளாக விடிய விடிய மழை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 2வது நாளாக விடிய விடிய மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 6 அடி உயர்ந்தது. அதிகபட்சமாக குண்டாறில் 84 மி.மீ., மழை பெய்துள்ளது. குமரி கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், செங்கோட்டை, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இன்று காலை முதல் லேசான சாரல் இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. அதேபோல நெல்லை பல்கலைக்கழக செய்முறைத் தேர்வுகளும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறும் என பதிவாளர் சந்தோஷ்பாபு அறிவித்துள்ளார்.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை கொட்டி வருவதால் அணைகளகுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் வளம் சேர்க்கும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணை நேற்றை விட இன்று 6 அடி கூடி 125.70 அடியானது. அணைக்கு விநாடிக்கு 4886 கன அடி தண்ணீர் வருகிறது. 356 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறில் 3 அடி கூடி இன்று 57.25 அடி உள்ளது. இங்கு 7512 கன அடி தண்ணீர் வருகிறது. ஆனால் வெளியேற்றம் இல்லை. சேர்வலாறு 5 அடி கூடி 140.78 அடியானது. கடனா 83.50 அடியும், ராமநதி 82 அடியும், குண்டாறு 31.10 அடியும், வடக்கு பச்சையாறு 2.75 அடியும், நம்பியாறு 14.10 அடியும், கொடுமுடியாறு 46 அடியும், அடவிநயினார் அணை 126 அடியும் நீர் மட்டம் உள்ளது.

மழை அளவு:
நெல்லை மாவட்டத்தில் அம்பை 28.08 மி.மீ., ஆய்க்குடி 18.06, சேரன்மகாதேவி 39.06, மணிமுத்தாறு 27.08, நாங்குநேரி 83,  பாளை 34, பாபநாசம் 43, ராதாபுரம் 51, சங்கரன்கோவில் 15, செங்கோட்டை 51, சிவகிரி 31, தென்காசி 19.02, நெல்லை 25, கடனா 15, ராமநதி 25, கருப்பாநதி 20, குண்டாறு 84, நம்பியாறு 50, கொடுமுடியாறு 35, அடவிநயினார் 27 மி.மீ., மழை பதிவானது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை குண்டாறில்தான் 84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாங்குநேரியில் 83 மி,மீ பெய்திருக்கிறது.

அணையில் தண்ணீர் திறப்பு:

142 அடி கொண்ட பாபநாசம் அணையில் இன்று நீர்மட்டம் 125 அடியாக உள்ளது. இதுபோல் 118 அடி கொண்ட மணிமுத்தாறில் 57 அடியும் உள்ளது. பாபநாசம் அணை நிரம்ப இன்னும் 17 அடி தண்ணீர் தேவை. இதுபோல் மணிமுத்தாறு அணை இன்னும் பாதியளவு கூட நிரம்பவில்லை. இங்கு 61 அடி தண்ணீர் தேவை. இப்படி இருக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விவசாயத்திற்காக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இன்று முதல் 154 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்துள்ளார். தற்போது மழை பெய்து வரும் நிலையில் அணை நிரம்பாத நிலையில் பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுவே சில நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும். அது தவிர மழைக் காலம் முடிய இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ளது. இந்த நிலையில் அணைகளில் தண்ணீர் திறப்பதால் அது வீணாக கடலுக்குத்தான் செல்கிறது.


Tags : dam ,pond ,Papanasam , Maximum height of 84 mm, recorded: Papanasam dam rises to 126 feet ...
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...