×

இரு நாட்கள் இடைவிடாது கொட்டித் தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு நாட்கள் இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 108 வீடுகள் சேதமாகி உள்ளன. 2 பேர் பலியாகி உள்ளனர்.  லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்று மகா புயலாக உருவானது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னம் குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளதால் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரு நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இங்கு மட்டும் 450 விசைப்படகுகளும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் புயல் சின்னம் காரணமாக இன்று 2வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் 4ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுக குடியிருப்பில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்ததால் வீட்டிற்கு மட்டும் சேதம் ஏற்பட்டது. மழையால் உப்பளங்களும் மூழ்கி கிடக்கின்றன.
தூத்துக்குடி தற்காலிக பஸ்நிலையம் மழை நீரால் தத்தளிக்கிறது. மாவட்ட அளவில் உள்ள 510 குளங்களில் 35க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் நிரம்பி விட்டன.

தூத்துக்குடியில் பாத்திமாநகர், பொன்நகர், ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், கேவிகே நகர், இந்திரா நகர், கல்லூரி நகர், வள்ளிநாயகபுரம் உள்ளிட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர சிப்காட் பைபாஸ் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் 50க்கும் மேற்பட்டவை நீரில் மூழ்கி கிடப்பதால் அவற்றை வெளியில் எடுக்கமுடியவில்லை.

நேற்றிரவு வரை மாவ ட்ட அளவில் பெய்த மழையால் சிறியதும் பெரியதுமாக 108 வீடுகள் இடிந்துள்ளன. 3 கால்நடைகள் பலியாகி உள்ளன. மழையால் 2பேர் பலியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மாநாடு நத்தம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. எப்போதும் வென்றான் அருகே கொல்லம்பரும்பு குளம் நிரம்பி வயல்களில் பாய்கிறது. இந்த குளக்கரை உடைப்பு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

இதுபோல் விளாத்திகுளம் பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரம்-கமலாபுரம் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன மழையால் வைப்பாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை நீரும் மழை நீரும் கலந்து ஓடுவதால் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரோச் பூங்கா வெள்ளத்தில் மிதப்பதால் பூங்கா எது, கடல் எது என்று தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. விமானசேவையில் இதுவரை பாதிப்பு இல்லை. இன்று காலையில் விமானம் வந்து இறங்கிச்சென்றது. இரு நாட்கள் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று 2ம் நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வயல்கள் தண்ணீரில் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீரநாயக்கந்தட்டு, கோரம்பள்ளம், குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்டபகுதியில் நெல், வாழை உள்ளிட்டவைபயிரிடப்பட்டுள்ளது. இந்தபகுதியில் கனமழை காரணமாக வயல் நிலங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. இதனால் வாழை, நெல் உள்ளிட்டவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளை கவலையடைந்துள்ளனர்.

Tags : Tuticorin ,floods , Two days of uninterrupted rain: Tuticorin floating in flood
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...