×

மத்திய அரசின் கோரிக்கையின் ஏற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐஓசிக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் செல்வதால், கூடுதலாக நிலம் ஒதுக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்த நிலையில், தமிழக அரசு நிலம் ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 263 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், மருத்துவமனை அமைக்க தமிழக அரசின் சார்பில் 202 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.  

48 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு நிதிக்குழுவைச் சேர்ந்த சஞ்சய்ராய் தலைமையிலான மத்தியக் குழுவினர் கடந்த ஜூன் மாதம் ஆய்வு செய்தனர். அவர்களுடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த குழுவினரும் ஆய்வில் ஈடுபட்டனர். மருத்துவமனை அமைவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா? மருத்துவமனை அமைப்பதற்கான இடம் பரப்பளவு தேவையான அளவில் உள்ளதா? என்பது குறித்து ஜப்பானிய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மண்ணின் தரம் நன்றாக உள்ளது.  இதனால் 6 மாடிக்கு மேல் கட்டிடம் கட்டலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதிக்குழுவினர் அளித்த பிறகு கட்டுமான பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மருத்துவமனையின் கட்டிட பணிகளும் துவங்கவில்லை. கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முன் அனுமதி வழங்காததால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கவில்லை என ஆர்டிஐ மூலம் கடந்த ஜூலை மாதம் தகவல் வெளியானது. தற்போது எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிருக்கும் மத்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்திற்கு முன் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

Tags : Tamil Nadu Government ,Madurai AIIMS Hospital ,land ,Central Government ,Madurai , Madurai, AIIMS Hospital, Extra Land, Government of Tamil Nadu, Approval
× RELATED தமிழக அரசுக்கும், தமிழக...