×

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ இளைஞர்களும் ஈடுபடலாம்: அரியலூர் கலெக்டர் அழைப்பு

அரியலூர்: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகள் ஈடுபட வேண்டுமென அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் ரத்னா கூறியதாவது: அரியலூர் ஒன்றியம் ராஜீவ்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை வீடு வீடாகவும், திறந்தவெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராஜீவ்நகர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மழை காலங்களில் குடிநீர் காய்ச்சி பருக வேண்டும். தங்களது பெற்றோர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள்,

இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலருடன் தொடர்பு கொண்டு சேவை செய்ய வேண்டும் என்றார். ஆய்வின்போது துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, தாசில்தார் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Volunteer youth ,Ariyalur Collector , Dengue Prevention, Volunteer Youth, Ariyalur Collector
× RELATED புயல் - மழை பேரிடரிலிருந்து நம் மக்களை...