×

1957ம் ஆண்டு கட்டப்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை பராமரிக்காமல் அலட்சியம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

கொள்ளிடம்: 61 ஆண்டுகளை கடந்தும் வலிமையுடன் இருந்து வரும் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை முறையாக பராமரிக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடிக்கும், வல்லம்படுகைக்கும் இடையே ஆற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கட்டப்பட்ட பாலத்தில் கடந்த 1957ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியே இரவும், பகலாக தொடர்ந்து அனைத்து வகையான வாகனங்களும் சென்ற வண்ணம் இருந்து வருகின்றன.

இந்தப்பாலம் கட்டப்பட்டு 62 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் வலிமையுடன் இருந்து வருகிறது. இந்தப்பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. ஆற்றுப்பாலம் துவங்கும் இடமான சோதனைச் சாவடி அருகே ஆற்றில் இறங்கிச் செல்வதற்காக இரண்டு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் உடைந்தும் இறங்கிச் செல்வதற்கு இயலாத வகையிலும் செடிகள் மண்டிக் காடாக காட்சியளிகிறது. பாலத்தை ஒட்டி வைக்கப்பட்டுள்ள கைப்பிடித் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள் துருபிடித்தும் கைப்பிடித்தூண்கள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. மேலும் ஆற்றுப்பாலத்தின் நடுவே இணைப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி மேலே தெரிவதால் கார் மற்றும் மோட்டார் பைக்கில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

எதிர் எதிரே வரும் வாகனங்கள் இந்தப் பாலத்தின் விரிசலால் விபத்துக்குள்ளாகின்றன. இதுகுறித்து கொள்ளிடம் சமுக சேவகர் பிரபு கூறுகையில், 1957ல் திறக்கப்பட்ட இந்த கொள்ளிடம் ஆற்றுப்பாலம் நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தை இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளை கடந்தும் வலிமை குன்றாத இந்த பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாகப் பராமரிக்கவில்லை. பாலத்தை சூழ்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வில்லை. மேலும் அனைத்து இடங்களிலும் மழை நீர் வடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள துவாரங்களில் உள்ள அடைப்புகளை பாலித்தீன் கவர்கள் சிக்கியுள்ளதால் அவற்றை நீக்காமல் இருப்பதால் மழை நீர் பல நாட்கள் தேங்கியே கிடக்கிறது. இதனால் வலிமையின்றி போவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் பாலத்தின் அடியில் உள்ள மதகில் இணையும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் அடிக்கடி பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. எனவே வலிமையாக உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை முறையாகப் பராமரித்து பாதுகாக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : river bridge , Built , 1957 ,negligence ,maintaining river bridge, public.indictment
× RELATED 3 மாதங்களுக்கு முன் வெள்ளத்தில்...