×

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள்: காரைக்கால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்... கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்கால்: காரைக்கால் முழுவதும் சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரிக்கிறது. இதில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளை சாலையில் திரியவிட கூடாது. மீறினால், கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், காரைக்கால் கடற்கரை சாலை மற்றும் போக்குவரத்துமிக்க முக்கிய சாலைகளெங்கும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மாடு, பன்றி, நாய் மற்றும் குதிரைகள் கூட்டம் கூட்டமாக திரிகிறது. இதில் நாய்களும், மாடுகளும் தான் மிக அதிகம். இதனால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்தவண்ணம் உள்ளது,

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், காரைக்கால் கடற்கரை சாலையில் மக்கள் நடந்தாலும், மோட்டார் சைக்கிள், காரில் சென்றாலும் வாகனங்களில் வந்து மோதி உயிர் சேதத்தை ஏற்படுத்தும் வண்ணம் மாடுகள் சர்வ சுதந்திரமாக திரிகிறது. இது ஒருபுறமெனில், சாலை, நடைபாதைகளில் கால்நடைகளின் கழிவுகளால் மக்கள் நடமாட முடியாமலும், சிறிது நேரம் கூட அமர முடியாமலும் பெரும் இம்சைக்கு ஆளாக நேரிடுகிறது. இரவு நேரத்தில், கட்டுப்பாடின்றி சாலைகளில் திரியும் கால்நடைகளை அடையாளம் காண முடியாமல் அடிக்கடி விபத்துகளும், அதனால் உயிர்பலியும் அதிகரிக்கிறது. ஆகையால், சாலைகளில் திரியும் கால்நடைகளை மாவட்ட நிர்வாகம் நகராட்சி  மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் போர்க்கால அடிப்படையில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்  என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, சமூக நல ஆர்வலர்களிடம் கேட்டதற்கு,  காரைக்கால் மாவட்ட நகரப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி, அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்துகள், காவல்துறை எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும் கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாக கையாள முன்வராததால்  அவை மீண்டும், மீண்டும் சாலையிலேயே சுற்றித்திரிகின்றன. மேலும் இனிவரும் காலங்களில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள்  பெயரளவில் செயல்படாமல்  மாடுகள், நாய்களை பிடிப்பதற்கு தினசரி பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவற்றை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் செய்ய முன்வராததால் ஊரில் உள்ள மாடுகளில் முக்கால்வாசி கடற்கரையில் தான் குடிகொண்டிருக்கிறது. மீதி கால்வாசி நகர் பகுதியில் திரிகிறது. கடற்கரை சாலையில் மாடுகளும்,

நாய்களும் கூட்டம் கூட்டமாக படுத்து உறங்குவதால் இரவு நேரத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாத கடற்கரை மற்றும் முக்கிய சாலையில் வாகனங்களில் செல்ல அச்சம் ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் திரியும் கால்நடைகளால் தான் அதிக விபத்துக்கள் நடக்கிறது. விபத்து சிகிச்சை மற்றும் முதலுதவிக்கு கூட லாயக்கற்ற காரைக்கால் மருத்துவமனையாக உள்ளது. இதனால் விபத்தில் சிக்கும் பலரது உயிர் கேள்விக்குறியாக நிற்கிறது.  குறைந்தபட்சம், சாலைகளில் திரியும் மாடுகள், நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினாலே பாதி பிரச்னை தீர்வுக்கு வரும். ஒரு சில மாநிலங்களில் சாலையில் திரியும் மாடுகளின் கொம்புகளில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால்,

இரவு நேரத்தில் கால்நடைகளின் நடமாட்டத்தை வாகனங்களில் வருவோரால் உடனே கண்டுகொண்டு ஒதுங்க முடிகிறது. இதில் செல்வு குறைவு. தனியார் அமைப்பிடம் வேண்டுகோள் வைத்தால் அதையும் அவர்களே செய்ய முன்வருவார்கள். இன்னும் சொல்லப்போனால், காரைக்காலில் உள்ள அரசு அதிகாரிகள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் உண்மையாக உழைத்தாலே காரைக்கால் அழகிய நகராக மாறும் என ஆதங்கத்துடன் கூறினர். கடற்கரை சாலையில் மாடுகளும், நாய்களும்  கூட்டம் கூட்டமாக படுத்து உறங்குவதால் இரவு நேரத்தில் போதுமான  மின்விளக்குகள் இல்லாத கடற்கரை மற்றும் முக்கிய சாலையில் வாகனங்களில் செல்ல  அச்சம் ஏற்பட்டுள்ளது

மாடு பிடிக்கும் வாகனம் எங்கே?
காரைக்காலில் அதிகளவில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்கென கடந்த ஆண்டு புதுச்சேரியில் இருந்து மாடுகள் பறிமுதல் செய்யப்படும் வாகனம் கொண்டுவரப்பட்டது. ஒரு சில மாதங்கள் இயங்கிய இந்த வாகனம் பிறகு எங்கே சென்றது என இதுவரை தெரியவில்லை. எனவே மேலும் புதிய வாகனங்களை காரைக்காலுக்கென ஒதுக்கித் தர வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் மாடுகளை ஏலம் விட வேண்டும்
காரைக்காலில் மாடுகளை வளர்க்கும் பலர், பகல் முழுவதும் அதை சுற்றித்திரிய விடுகின்றனர். இரவானதும் பாலை கறந்து விட்டு பிறகு சாலைகளில்  விட்டுவிடுகின்றனர்  எனவே மாடுகளின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்படும் மாடுகளை  ஏலம் விட வேண்டும்.  அப்போதுதான் அவர்கள் மாடுகளை வீட்டில்  அடைத்து வைத்து வளர்க்க முன்வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : accidents ,Karaikal ,roads , Accidents, Karaikal Road, Livestock
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...