×

விருத்தாசலத்தில் பரபரப்பு பித்தளை நகைகளை தங்கம் என ஏமாற்றி விற்க முயற்சி: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 3பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பித்தளை நகைகளை தங்க நகைகள் என்று ஏமாற்றி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ நகர், பரவேஷ்வரபுரம், பகுதியை சேர்ந்த தோதாராம் மகன் சங்கர்(39), மோதி பகவான் மகன் மோகன்(54) மோகன் மகன் நாராயணன்(30), ஆகிய 3 பேர் விருத்தாசலம் பகுதிகளில் உள்ள கோயில்களில், தங்கிக்கொண்டு பிளாஸ்டிக் பூக்கள்,  கண்ணாடியிலான பொருட்களை பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில் செராமிக் கம்பெனி வைத்துள்ள அசோக்குமார்(55) என்பவரிடம் தங்கச் செயின் எனக்கூறி பித்தளை செயினை மூவரும் விற்க முயன்றனர். அப்போது தங்களிடம் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளது எனவும் அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி ஒரு செயினை கொடுத்துள்ளனர்.

உடன் அந்நகைகளை பார்த்த அசோக்குமார், அதனை பரிசோதித்த போது, பித்தளையில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிந்தது. இது குறித்து அவர்களிடம் அசோக்குமார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியுள்ளனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட அசோக்குமார் அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடிக்க முயன்றபோது சங்கர் என்பவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு புகார்  அளித்ததன் பேரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ஆதி, குமரேசன் மற்றும் போலீசார் சங்கரை  கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். சங்கர் அளித்த தகவலின் அடிப்படையில், விருத்தாச்சலம் டிஎஸ்பி இளங்கோவன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவருடன் இருந்த மற்ற இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதில் பிடிபட்ட அவர்கள் கூறும்போது நாங்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்தோம், அப்போது வேலை எதுவும் கிடைக்காததால் இங்குள்ள செராமிக் கம்பெனிகளில் தங்கி செராமிக் வேலை செய்து வந்தோம்.

அதில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் பூச்செடிகள் கண்ணாடியிலான பொருட்களை விற்பனை செய்து வந்தோம். அதிலும் போதுமான வருமானம் கிடைக்காததால் பித்தளை செயினை தங்க செயின் என்று கூறி ஏமாற்றி விற்க முயன்றோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர் என தெரிவித்தனர். பின்னர் மேற்கண்ட மூவரையும் கைது செய்த விருத்தாசலம் போலீசார் வேதாசலம் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் எழில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், தனிப் பிரிவு தலைமை காவலர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் பலர் உடனிருந்தனர்.

Tags : Karnataka , Three arrested,Karnataka,trying,sell brass,jewelery
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!