உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயர்வதற்கு வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே காரணம் : தேசிய ஒற்றுமை தின விழாவில் பிரதமர் மோடி உரை

அகமதாபாத் : ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஒரே தேசம் என்ற சர்தார் வல்லபாய் படேலின் கனவு நினைவாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை தினம்

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளை இன்று தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் படேல் சிலை நிறுவப்பட்டு இன்றுடன் ஓராண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு அனைத்து மாநில காவல்துறையின் ஒற்றுமையை விளக்கும் அணிவகுப்பு நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியா என்னும் இடத்தில் நர்மதை ஆற்றின் நடுவே 597 அடி நீள உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஒற்றுமை சிலைக்கு அருகே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் நடக்கும் விழாக்களை போன்று தேசிய ஒற்றுமை தினத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலாச்சார நடன அணிவகுப்பு ஊர்வலமும் நடைபெற்றது. மேலும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் பல சாகச நிகழ்ச்சிகளும் தேசிய ஒற்றுமை தினத்தில் அரங்கேற்றப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

பிரதமர் மோடி உரை

 

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை அமைதியின் சின்னம் எனக் குறிப்பிட்டார். இந்தியா பன்முகத் தன்மையால் நிரம்பியிருப்பதாகவும் ஆனால் நாம் வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் கூறிய மோடி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையை கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதற்கு வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே காரணம் என்று கூறிய அவர், 133 கோடி இந்தியர்களும் ஒற்றுமையாக இருந்து எதிரிகளை சந்திப்பதே சர்தார் வல்லபாய் படேலுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்று தெரிவித்தார்.

370வது சட்டப்பிரிவால் இந்தியாவில் இருந்து காஷ்மீரி தனிமைப்பட்டு இருந்ததாகவும் தற்போது அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஒரே தேசம் என்ற சர்தார் வல்லபாய் படேலின் கனவு நினைவாகியுள்ளதாகவும் மோடி கூறினார். தற்போது தான் கூட்டுறவு கூட்டாட்சி ஜம்மு - காஷ்மீரில் நிலைநாட்டப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒற்றுமைக்கான மாரத்தான் ஓட்டத்தை அமித்ஷா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Related Stories:

>