×

வடிகால் ஆக்கிரமிப்பால் தண்ணீரில் மிதக்கும் சாலைக்கிராமம்: நிரந்தர நடவடிக்கை தேவை

இளையான்குடி: சாலைக்கிராமத்தில் வடிகால் வாய்க்கால் சீரமைக்காததால் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் அவலநிலை உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள வடிகால் வாய்க்கால்களை கன்டுபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி தாலுகா சாலைக்கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக முற்றிலும் ஏமாற்றிய மழையால் வறண்ட நீர்நிலைகளில் தற்போதுதான் தண்ணீர் தரையில் கொப்பளித்து உள்ளது. ஆனால் மழைநீர் வடிய போதிய வடிகால் வாய்க்கால் இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் உள்ளது. வாய்க்கால் அனைத்தும் தூர்ந்து போயுள்ளது.

மடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் ஆர்எஸ் மங்கலம் விலக்கு பகுதி வரையிலும், வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியில்லாமல் காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைக்கிராமம் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி அருகே செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் பள்ளியில் குளம்போல தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள்  தண்ணீரில் நடந்து வகுப்பறைக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸ்டாண்ட் பகுதியில்  சில ஆண்டுகளுக்கு  முன் இருந்த வடிகால் வாய்க்கால் அனைத்தும் மறைத்து, மூடப்பட்டுள்ளதால் விஏஓ ஆபிஸ் பகுதியை சுற்றிலும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. கடந்த வாரம் இளையான்குடி ஊரக வளர்ச்சி ஆணையாளர், செயற்பொறியாளர் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்த நிலையில், தற்போது தொடர் மழைபெய்ததால் சாலைக்கிராமம் பகுதியே தண்ணீரில் மிதப்பது கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீரை அகற்றுவதற்காக  ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய்த்துறையினருடன் தன்னார்வலர்கள் இணைந்து, சாலைக்கிராமம் பகுதியில் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்களை அகற்றினர்.
தற்காலிகமாக அகற்றப்பட்ட இந்த ஆக்கிரமிப்புகளை, சாலைக்கிராமம் முழுவதும் நிரந்தரமாக  மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drainage occupation, roadside
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்