×

தியானப்பயிற்சிக்காக ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தகவல்

டெல்லி: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதுபற்றி டெல்லியில் நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, தியானப்பயிற்சிக்காக ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். விரைவில் அவர் நாடு திரும்புவார் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் நடக்க உள்ள போராட்டம் குறித்து ராகுலுடன் ஆலோசனை நடத்தி அவரது வழிகாட்டுதல் படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போராட்டத்தில் ராகுலோ, சோனியாவோ கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார். ராகுல் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், அவர் இந்தோனேசியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா கூறுகையில், உயர்ந்த பாரம்பரியத்துடன் தியானப் பயிற்சியின் மையமாக இந்தியா விளங்குகிறது. அப்படியிருக்கும்போது, தியானப் பயிற்சிக்காக ராகுல் அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? அவர் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் தலைவர் ஆவார். எனினும், அவரது பயணம் பற்றி காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Rahul Gandhi ,Randeep Surjewala ,spokesperson ,Congress , Meditation, Rahul Gandhi, Abroad, Travel, Congress, Spokesman, Information
× RELATED தருண் கோகாய் எனது குருநாதர்: ராகுல் காந்தி உருக்கம்