×

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடமாக அறிவித்து வேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் : முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

சேலம் : குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் அரசு முழு முயற்சி எடுத்தது, எனினும் உயிருடன் மீட்காதது வேதனை அளிப்பதாக  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றியதையும் தீபாவளி, மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டதையும்  குறிப்பிட்ட முதல்வர், குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது என்றும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது, ஆழ்துளை கிணறுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கங்கள் திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கங்கள் போராட்டத்தில் ஈடுப்படவில்லை  என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் பணிக்கு வராமல் பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது என்று எச்சரித்த முதல்வர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறினார்.

மேலும் முதல்வர் பழனிசாமி பேசியது குறிப்புகளாக பின்வருமாறு :

*குழந்தை சுஜீத்தை மீட்க அதிகாரிகள் இரவு பகலாக பாடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அரசை குறை சொல்வது முறையல்ல.

*என்.டி.ஆர்.எப். என்பதே துணை ராணுவத்தின் சிறந்த வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டது.

*பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

*அரசு மருத்துவ கல்லூரியில் படிப்போருக்கு தலா ரூ.1.24 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது.

*மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசு இவ்வளவு செலவு செய்து படிக்கவைக்கிறது.

*நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அளித்தால் எப்படி நிறைவேற்ற முடியும்.

*போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.


Tags : doctors ,vacation ,CM Palanisamy , Baby Sujith, CM Palanisamy, Struggle, Medical Associations, Deepwater Well, Doctors
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை