×

திருப்பத்தூரில் டெங்கு கொசு புழு உற்பத்தி: அரசு போக்குவரத்து பணிமனைக்கு அபராதம்.. நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் டெங்கு கொசு புழு உற்பத்திக்கு காரணமான அரசு போக்குவரத்து பணிமனைக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சப்-கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறையினர் கடந்த ஒரு வாரமாக அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாத அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடந்த ஒரு வாரத்தில் ₹30 ஆயிரம் வரை அபராதம் வசூலித்துள்ளதாக ஆணையாளர் சந்திரா தெரிவித்தார்.

இதுகுறித்து ஆணையாளர் சந்திரா கூறியதாவது: திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாலுகா அலுவலகம், வணிக வளாகம், போக்குவரத்து பணிமனை, வேளாண்மைத்துறை அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவலர் குடியிருப்புப்பகுதி, அரசு ஊழியர்கள் குடியிருப்புப்பகுதி, நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், நேற்று நடத்தப்பட்ட ஆய்வில் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் பயன்படாத டயர்கள், நீர் தொட்டி, வீணடிக்கப்பட்ட பொருட்களில் குவிந்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பணிமனைக்கு ரூ6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட ஆய்வில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து இதுவரை ரூ30 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அரசு அலுவலகங்களில் சுகாதார அலுவலர் தலைமையில் துப்புரவு பணியாளர் தூய்மைப்பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை தூய்மையாக வைத்துகொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government transport workshop ,Tirupathur , Thiruppathur, Dengue mosquito worm production, fine
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...