×

வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் மழை; 3 வீடுகள் சேதம், 2 கால்நடைகள் பலி.. சோளிங்கரில் அதிகபட்சமாக 138 மி.மீ மழை பதிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 3 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 2 கால்நடைகள் பலியாகியுள்ளன. சோளிங்கரில் அதிகபட்சமாக 138 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர்ந்து இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் சோளிங்கர், பொன்னை, காவேரிப்பாக்கம், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.  மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழை காரணமாக 2வது நாளாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும் விடுமுறை அளித்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைக்கட்டு, அரக்கோணம், குடியாத்தம் பகுதிகளில் தலா ஒரு வீடு மழையால் சேதமடைந்தது. ஆற்காட்டில் மின் ஒயர் அறுந்து விழுந்ததில் பசு, எருமை என 2 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்  காலை முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில்: வேலூர்  29.6, ஆம்பூர் 26.8, வாணியம்பாடி 31.3, ஆலங்காயம் 29, அரக்கோணம் 45.6,  காவேரிப்பாக்கம் 68.2, வாலாஜா 26.4, சோளிங்கர் 138, திருப்பத்தூர் 4.3,  ஆற்காடு 45.8, குடியாத்தம் 30, மேல்ஆலத்தூர் 38.2, பொன்னை டேம் 91.8,

நாட்றம்பள்ளி 10.8, காட்பாடி ரயில் நிலையம் 37, அம்முண்டி 38,  கேத்தாண்டப்பட்டி 18.2, வடபுதுப்பட்டு 39.4. மாவட்டத்தில் பதிவான மொத்த  மழையளவு 748.4 மி.மீட்டர். மாவட்டத்தில் பதிவான சராசரி மழையளவு 41.58  மி.மீட்டர்.

Tags : Vellore district ,houses ,district ,Thunderbolt ,Sholingar , Vellore, rain
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...