×

பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். திப்பு சுல்தானை சுதந்திர போராட்ட வீரரை  போல சித்தரித்து தவறான வரலாற்று தகவல்கள் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக பா.ஜ.க எம்.எல்.ஏ வான அப்பாச்சுரஞ்சன் என்பவர் கல்வி அமைச்சருக்கு கடிதம்  ஒன்றினை எழுதி இருந்தார். அதில் தமது ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்யவும், மக்களை மதம் மாற்றவும் தான் திப்பு சுல்தான் குடகு, மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வந்ததாகவும், கன்னட மொழிக்கும் திப்பு சுல்தான் மரியாதை காட்டவில்லை என்றும், பாரசீக மொழியையே அவர் தமது ஆட்சி மொழியாக பயன்படுத்தியதாகவும் ரஞ்சன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மடிகேரி என்ற பெயரை ஜாபராபாத் என்றும், மக்களுருவை ஜலாலாபாத் என்றும் திப்பு சுல்தான் பெயர் மாற்றியதாகவும், இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலய சொத்துக்களை பறித்து சூறையாடியதாகவும், மேலும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை மதம் மாற்றியதாகவும் தமது கடிதத்தில் தெரிவித்திருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஓட்டு அரசியலுக்காக திப்பு சுல்தானை பெரிய ஹீரோ ஆக்கிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாடநூல் நிறுவனத்திற்கு கல்வி அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா பாட புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் தொடர்பான அனைத்து பாடங்களும் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதை தம்மால் ஏற்க முடியாது என்றும், திப்பு ஜெயந்தி நிகழ்ச்சி இனி ரத்து செய்யப்படும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.


Tags : Yeddyurappa ,Tipu Sultan ,Karnataka ,Tipu Sultan: Karnataka , Textbook, Tipu Sultan, Lessons, Deleted, Karnataka
× RELATED கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்