×

திருநீர்மலை பகுதி அடையாறு ஆற்றில் வெள்ளத்தில் சென்றது தற்காலிக தரைப்பாலம்

* போக்குவரத்து கடும் பாதிப்பு * அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

சென்னை: சென்னை நகரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதுபோலவே, சென்னை புறநகரில் ஓடும் அடையாறு ஆற்றிலும் தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக  கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் பல்லாவரத்தில் இருந்து திருமுடிவாக்கம் செல்லும் பிரதான சாலையில் திருமுடிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அடையாறு ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் வாகனங்கள் இந்த பிரதான சாலையில் சென்று வரும் வகையில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. திருமுடிவாக்கம் சிப்காட் தொழில் வளாகத்திற்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் முதல் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் லகுரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் சென்று வந்த நிலையில் நேற்று திடீரென வழக்கத்திற்கு மாறாக அடையாறு ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வந்தது. இவ்வாறு வந்த வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பல்லாவரம்- திருமுடிவாக்கம் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் பல மணி நேரம் சாலையில் காத்துக்கிடந்தனர். மேலும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குன்றத்தூர் மற்றும் தாம்பரம் வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி   செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அடையாறு ஆற்றின் மீது அமைக்கப்பட்ட தரைப்பாலம் உடைந்ததால் பல்லாவரம்- திருமுடிவாக்கம் பிரதான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு, எங்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பிற  பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாமல் எங்கள் பகுதியே தனி தீவு போல் காட்சியளிக்கிறது. கடந்த பல மாதங்களாக அடையாறு ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள்  நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தங்களது பணிகளை விரைந்து முடிக்காமல், ஒரு சில தொழிலாளர்களை மட்டுமே வைத்து, ஆமை வேகத்தில் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மக்களின் வரிப்பணம் பெருமளவு வீண் விரயம் ஆகிறது.

இத்தனை மாதமாகியும் பாலத்தின் தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆற்றில் வெள்ளம் வந்துள்ளதால், பாலத்தின் உறுதித் தன்மையும் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி திருமுடிவாக்கம் அடையாறு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து, தடையில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Flooding ,Adiyar River ,land bridge ,Thirunirmalai ,area ,floods ,Tirunelveli , Tirunelveli area, Adiyar River, went , floods, temporary land bridge
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!