×

திருமுல்லைவாயல் பகுதியில் சாலைகளில் கழிவுநீர் தேக்கம்

திருமுல்லைவாயல்: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் பகுதிகளில் பல தெருக்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் சாலைகள் சிதிலமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான வாணி விநாயகர் கோயில் தெரு, வெள்ளி விநாயகர் கோவில் தெரு, பழைய ஈஸ்வரன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர் பிரதான சாலையின் ஒரு பகுதி, மாசிலாமணீஸ்வரர் நகர், வெங்கடாசலம் நகர் குறுக்கு தெருக்கள், சரஸ்வதி நகர் குறுக்கு தெருக்கள், கிழக்கு தென்றல் நகர், அனுமன் நகர், வினாயக நகர், வடக்கு தென்றல் நகர், வ.உ.சி நகர், மேற்கு தென்றல் நகர், கிழக்கு தென்றல் நகர், வடக்கு முல்லை நகர்,தேவி ஈஸ்வரி நகர், வைஷ்ணவி நகர், தேவி நகர், சோழன் நகர், செந்தில் நகர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனை அடுத்து, சில தினங்களாக பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருமுல்லைவாயல் உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. மேலும் போடப்பட்ட சாலைகளும் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்து உள்ளன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலைகளில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுகின்றனர். மேலும், முதியோர், பெண்கள், சிறுவர்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல், சேறும் சகதியுமாக கிடக்கும் சாலைகளில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். மேலும், பல இடங்களில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலையிலே விடப்படுகின்றன. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீரும், மழை நீரும் கலந்து நிற்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பல இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே இனியாவது திருமுல்லைவாயல் பகுதியில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கலந்த மழைநீரை அப்புறப்படுத்தவும், பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : roads ,area ,Tirumalavaiyaval ,Thirumullaivayal , Thirumullaivayal, area, roads, sewage, stagnation
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு