×

மழையின் காரணமாக எக்ஸ்பிரஸ், மின்சார ரயில்கள் தாமதம்: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கத்தில் ஒரு நாளைக்கு 120க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை 60க்கும் மேற்பட்ட பறக்கும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்துக்கு இடையூறின்றி குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து செல்ல முடியும் என்பதாலும் அதிகம் பேர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வர்கள் என ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் ரயில்களை இயக்குவதில் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்களை இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அதேபோன்று, தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் கால்டாக்சி, ஆட்டோவில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் மழையின் காரணமாக சிக்னல் கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே ஆங்காங்கே 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டன.   இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.


Tags : rain Express , Express, electric trains, delay , due , rain
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...