×

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்: கொசு உற்பத்தி அதிகரிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர், சிடிஎச் சாலை கிருஷ்ணாபுரம் பகுதியில் திறந்தவெளி கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அம்பத்தூர், சி.டி.எச் சாலை, கிருஷ்ணாபுரம்  பகுதியில் பள்ளிக்கூடம், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலையோரத்தை ஒட்டி அம்பத்தூர் நகராட்சியாக இருந்தபோது கழிவுநீர் கால்வாய் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்த கால்வாயில் தான் சிடிஎச் சாலை பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீர் சோழபுரம், ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள கால்வாய் வழியாக  அம்பத்தூர் ஏரிக்கு சென்றடைகிறது. இந்த கால்வாயில் அடிக்கடி ஏற்படும் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடும். இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதிப்பட்டு சென்று வருவார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், சிடிஎச்  சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கழிவுநீர் செல்ல திறந்தவெளி கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயை அம்பத்தூர் பகுதி, மாநகராட்சியாக மாறிய பிறகு கூட முறையாக கட்டாமல் விட்டுவிட்டனர். இதனால் லேசான மழை பெய்தாலும் கால்வாயில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து நிற்கும். அப்போது கழிவுநீர் செல்ல முடியாமல் கால்வாயில் தத்தளித்து பிறகு சிடிஎச் சாலையில் ஆறாக ஓடும்.

தற்போது அடிக்கடி பெய்து வரும் பருவ மழையால் கால்வாயில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலையில் தான் ஆறாக ஓடுகிறது. இதன் விளைவாக பாதசாரிகள் சாலையில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த சாலையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகள் கழிவுநீரில் நடந்தபடி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு கால்களில் சேற்று புண் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். மேலும், அப்பகுதிகளில் கால்வாயை ஒட்டி குடியிருப்புகள் இருப்பதால் மழை காலத்தில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே தஞ்சமடைந்து விடுகின்றனர்.

மேலும் வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் வரமுடியவில்லை. இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடைபெறாமல் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், சாலையில் கழிவுநீர் ஓடுவதால் கார் உள்பட கனரக வாகனங்கள் செல்லும்போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.   இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உடைகளில் கழிவுநீர் தெளித்து சேதமடைகின்றன. எப்போதும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் செல்கின்றன. இதனால் அவைகள் கடித்து மக்களுக்கும், வியாபாரிகளும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அனுப்பியும் மண்டல அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இனியாவது அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் கிருஷ்ணாபுரம், சிடிஎச் சாலை ஓரத்தில் உள்ள தற்காலிக கால்வாய்க்கு பதிலாக கான்கிரீட் கால்வாயை மூடியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Open Sewer Canal ,Ambattur ,Ambattur Krishnapuram Area , Ambattur, open, sewer canal, mosquito production, increase
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...