×

மூலிகை உணவகம் மூடப்பட்ட ஓராண்டுக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் புதிய உணவகம்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்பட்டு வந்த மூலிகை உணவகம் மூடப்பட்ட ஓராண்டிற்கு பிறகு புதிய உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மூலிகை உணவகம் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை சித்த மருத்துவர் டாக்டர் வீரபாபு நடத்தி வந்தார். இங்கு மூலிகையை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன. அதாவது மூலிகை சாப்பாடு 15க்கு மட்டுமே விற்கப்பட்டது. இதை தவிர்த்து மூலிகை டீ 5, முடக்கத்தான் தோசை 10, எள் உருண்டை, குழி பணியாரம், சோளம், கம்பு பணியாரம் 10, பயிறு  வகைகள் 5க்கும் என மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களும் மூலிகை உணவகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த உணவகம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில்  செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உணவகம் மூடப்பட்டது. தொடர்ந்து, மூலிகை உணவகம் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்களும் மாநகராட்சி ஊழியர்களும் காத்திருந்தனர். மேலும், தினம்தோறும்  உணவகத்தை தேடி வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடனே திரும்பினர்.ரிப்பன் மாளிகைக்கு வரும் பொதுமக்கள் வேறுவழியின்றி வெளியில் உள்ள உணவகங்களில் உணவு உட்கொண்டனர். மேலும் மூலிகை உணவகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ஓராண்டாக மூலிகை உணவகம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக உணவகம் ஒன்றை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த புதிய உணவகத்தில் மூலிகை உணவகத்தை போன்று மலிவு விலையில் உணவுகளை வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : restaurant ,Ribbon House ,New Restaurant , Herbal Restaurant, Ribbon House, New Restaurant, Officers, Action
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...